நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்கும் கோடைசீசனை காண வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்காக கோடை விழா நடத்தப்படுகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இந்தநிலையில், கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக இந்தாண்டு கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 11ஆவது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் 2டன் கிலோ கேரட் மற்றும் முள்ளங்கியை கொண்டு உருவாக்கப்பட்ட ஒட்டக சிவிங்கி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் 3டன் காய்கறிகளை கொண்டு செயற்கை நீரூற்று, கிட்டார், கடிகாரம், ரங்கோலி கோலம், மீன் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையினர் காய்கறிகளை கொண்டு யானை, டிராகன், மயில், முதலை, பஞ்சவர்ணகிளி, டெடிபியர், கங்காரு உருவங்கள் தத்ரூபமாக வடிவமைத்து இருந்தனர். நீலகிரி, கோவை, தர்மபுரி, திண்டுகல், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. சமையலுக்கு பயன்படுத்தும் பல வகையான காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விதவிதமான உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் நீலகிரி மாவட்டத்தில் விளையும் பல்வேறு வகையான மலை காய்கறிகளும காண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இரண்டு நாள் நடைபெற்ற இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.