2022-2023ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மே 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த மே 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்தநிலையில், நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மற்றும் OBC பிரிவினருக்கு 1,400 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், மூன்றாம் பாலினத்தவருக்கான நீட் தேர்வு கட்டணம் 800 ரூபாயில் இருந்து 900 ரூபாயாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் 8 ஆயிரத்து 500 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழி கட்டணத்துக்கான செலவு, GST வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.