தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதையும், கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதையும் உறுதி செய்ய தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி மற்றும் சிறுகாவேரி பாக்கம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தின் 6,926 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகிறது. இந்தநிலையில், நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தரமாக வழங்குவதற்கு இந்தஅரசு உறுதியாக உள்ளது. ஆகையால், இனிவரும் காலங்களில் குடோனில் இருந்து நியாய விலை கடைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தகுழு கடைக்கு ரேசன் பொருட்களை கொண்டு வருவதற்கு முன்பு குடோனில் தரத்தை சரி பார்த்து பின்னர் அந்தந்த கடைகளுக்கு அனுப்பி வைக்கும். மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு வாங்கக்கூடாது என்பதற்காகதான் ஊதிய உயர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளிடம் கையூட்டு பெற்ற அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை கையூட்டு பெற்றதற்காக 27 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டும், 2 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டும் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பனிச்சுமை அதிகமாக இருப்பதால் நியாயவிலைக் கடைகளில் உள்ள 4,000 காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.