தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் கடைசியாக வெளியான திரைப்படம் ’மயக்கம் என்ன’. இதையடுத்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதான மற்றும் இளைஞராக என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தபடத்தில், செல்வராகவன் இயக்குநராக மட்டுமல்லாமல், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் படத்தில் நடிக்கிறார். தவிர, யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் – இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் ஏற்கெனவே 3 வெற்றிப் படங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், 4ஆவது முறையாக வெளிவர இருக்கும் இந்தபடம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.