day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நானே என் முகம்

நானே என் முகம்

ரோகிணி ஒரு சிறந்த நடிகை. பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஒரு இயக்குனராகவும் அவர் பரிணாமம் பெற்றிருக்கிறார். சமூக இயக்கவாதியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். மக்களிடம் கலை, இலக்கியத்தைக் கொண்டு போக அவர் முயன்று வருகிறார். அவரிடம் ஒரு பேட்டி…

எது உங்கள் முகம்? ஒரு நடிகை என்ற முகமா? சமூக செயற்பாட்டாளர் என்ற முகமா?
நடிகை என்பது என் தொழில். சமூக செயற்பாட்டாளர் என்பது என்னை நான் கண்டுகொள் கிற ஒரு பயணம். நான் ஒரு நடிகையாக ஒரு வட்டத்திற்குள் நிற்காமல் நான் சார்ந்த சமூகத்தைப் பார்ப் பதற்கு எனக்கு நானே சொல்லிக்கொள்கிற ஒரு விதம்தான் என் செயல்பாடு. நான் சார்ந்த சமூகத்தின்பால் எனக்கு இருக்கிற அக்கறையை நான் வெளிப்படுத்துகிறேன்.

சினிமாவில் சமூக செயல்பாடு சாத்தியம் இல்லையா?
சினிமா ஒரு வியாபாரம். கலைக்காக மட்டும் அதில் நான் இல்லை. அது என் வாழ்வாதாரம். வணிகத்தின் ஒரு அங்கமாக சினிமா இருக்கிறது. என்ன மாதிரி இருக்க நான் விரும்புகிறேனோ அப்படித்தான் நான் சினிமாவிலும், பொது வாழ்விலும் இருக்கிறேன்.

சினிமாவில் நீங்கள், நீங்களாகவே இருக்க முடிகிறதா?
பெரும்பாலும் இருக்க முடிகிறது. ஒரு சில இடங்களில் பேச நினைத்ததைப் பேச முடியாமல் போயிருக்கிறது. பெரிய சமரசம் நான் செய்து கொள்வதில்லை.
நீங்கள் பங்கு கொண்ட எத்தனையோ சினிமாக்கள் சமூகத்தைக் கெடுப்பதாக இருந்திருக்கின்றனவா, இல்லையா?
எனக்கு விவரம் அதிகம் தெரியாத ஒரு சமயத்தில் அப்படி இருந்திருக்கிறது. என்னால் தேர்வு செய்ய முடிகிற சமயத்தில் அப்படி இல்லை.

பாகுபலியை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்துக்கொள்ள முடியுமா?
இல்லவே இல்லை. அது ஒரு நல்ல பொழுதுபோக்கு கொண்ட படம். பல மக்களுக்கு அது மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. ஆனால் அது கெடுக்கும் சினிமா இல்லை. எல்லா சினிமாக்களும் ‘மகளிர் மட்டும்’ மாதிரி அமைந்துவிடுவதில்லை. சினிமா எனக்குத் தொழில். எனக்கு வேறு தொழில் தெரியாது.

உலக சினிமா அரங்கில் பல நடிகைகள் வணிகப் படங்களுக்குப் போகாமல் நல்ல படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்கள் அல்லவா?
ஆம். இருந்திருக்கிறார்கள். தலையில் கண்ணாடி குத்தி இரத்தம் வழிந்தபோது நெகிழ்ச்சியில் அதுவரை கடவுள் நம்பிக்கை இல்லாத நான்கூட கடவுளே என்று ஒரு முறை சொல்லிக்கொண்டேன். அப்படித்தான் எனக்கு வரும் வாய்ப்புகளில் சிறந்தவற்றை நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் என் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டால் எனக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு?
என் கணவர் ரகுவரன் 2008இல் இறந்த பிறகு கடவுள் நம்பிக்கை எனக்குப் போனது.

நீங்கள் கம்யூனிஸ்டா?
இல்லை. கம்யூனிஸமுடைய எல்லா சித்தாந்தங்களும் எனக்கு ஏற்புடையவை.

கம்யூனிச மேடைகளில் உங்களைப் பார்க்க முடிகிறதே…
தமுஎகச மேடைகளில் என்னைப் பார்க்கலாம். அவை மக்களுக்கானவை. மக்களிடம் கலையைச் சென்று சேர்க்க நினைக்கிறவர்களுடன் நான் இருக்கிறேன்.

ஒரு கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட நினைக்கிறீர்களா?
தேர்தல் அரசியல் என்று வந்தால் மிகப் பெரிய சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. கட்சியில் ஒத்துப் போக வேண்டும். கூட்டணிகளுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். இது ஏற்புடையதாக இருக்காது. கட்சிகளில் அதிகார விளையாட்டு வந்துவிடுகிறது. அதற்காக என் நேரத்தைச் செலவிட முடியாது.

இலக்கியவாதிகளும், நடிகர்களும் எம்பிக்களாக, எம்எல்ஏக்களாக இருக்கிறார்களே…
அப்படி வந்த பலர் பல ஆண்டுகள் அரசியல் பணி செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வேலை செய்யும் வாய்ப்புகளை நான் எனக்குக் கொடுத்துக்கொள்ளவில்லை.
நீங்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து ஒரு எம்எல்ஏ ஆகலாம்தானே…
நான் அரசியலில் உழைக்க வில்லையே…

உங்கள் அடுத்த பயணம் எது?
நான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் ஆக வேண்டும். ஏற்கனவே இயக்கிய ‘அப்பாவின் மீசை’ விரைவில் வெளி வரும்.

ஒரு பெரிய வணிக நடிகையாக ஆக நீங்கள் முயலவில்லையா?
கதாநாயகியாக நான் நடித்த காலத்தில் பெரிய திட்டமிடல் இருக்கவில்லை. தமிழில் கிடைக்க வேண்டிய நல்ல கதாபாத்திரங்கள் பெரிதாகக் கிடைக்கவில்லை. மலையாளத்திலும், தெலுங்கிலும் நல்ல பாத்திரங்கள் கிடைத்தன.

நீங்கள் நடித்த படங்களில் மிகவும் பிடித்த தமிழ்ப் படம் எது?
‘மறுபடியும்’ என்ற படம் மிகவும் பிடித்தது. ’மகளிர் மட்டும்’, ‘விருமாண்டி’ படங்களும் பிடித்தன.

ரஜினியோடு நடிக்கவில்லை, கமலோடு நடிக்கவில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
(சிரிக்கிறார்) அப்படி ஒன்றும் நான் நினைக்கவில்லை. நல்ல பாத்திரங்கள் கிடைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.

உங்கள் மகனை என்னவாக ஆக்க வேண்டும்?
அவனுக்கு ஒரு மருத்துவர் ஆக விருப்பம். அவனுக்கு சினிமாவில் விருப்பம் இல்லை.

உங்களுடைய ஒரு முக்கியமான இலக்கு என்ன?
நானும் என் மகனும் சேர்ந்து மருத்துவம் கிடைக்காத இடத்தில் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவனுக்கும் அதே எண்ணம் இருக்கிறது.
வாழ்த்துகள் ரோகிணி!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!