ஆன் லைன் வகுப்பு வரமா? சாபமா?
ரமாதேவி, ஆசிரியை
டிசம்பர் 2019இல் கொரோனா உலகில் தன் முதல் எண்ணிக்கையைத் துவங்கியபோது அதன் வீரியம் புரியாமல் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகக் கடந்து போனோம். ஆனால் அது சமூகப் பரவலாகி தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகைச் சுற்றி வளைத்த போது மூச்சு திணறித்தான் போனோம். உலகப் பொருளாதாரம் சரிந்து, வாழ்வாதாரங்கள் நிலை குலைந்து போன போது கல்வித்துறையும் கலகலத்துப் போனது. உலகின் 1.725 பில்லியன் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கியபோது, இணையக் கல்வி முறை இன்றியமையாததாகி விட்டது. இந்த இக்கட்டான சூழலில் நாம் பாரம்பர்ய கல்வி முறையிலிருந்து Home Schooling என்ற முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இந்தச் சூழல் நமக்குப் புதிது. நமது கலாச்சாரத்திற்குப் புதிது. இந்த E Learning நம் பாரம்பர்ய வகுப்பறைக் கற்றலுக்கு மாற்றாக UNESCO வின் பரிந்துரையுடன் நம்மிடம் கொடுக்கப் பட்டது. உலகளவில் பல வளர்ந்த நாடுகளில் இது வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிற்குப் புதிதாக அறிமுகமாகியுள்ள MOOC – Massive Open Online Class கல்விப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் பல கோடி மாணவர்கள் கொண்ட, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொண்ட இந்தியா போன்ற பெரு நாட்டில் அனைத்து வகை மாணவர்களுக்கும் online வகுப்புகள் சாத்தியமா என்றால்…..இல்லை என்பதே உறுதியான பதில். நடுத்தர , கீழ் நடுத்தர, கிராமப்புற மற்றும் மலைப்புற மாணவர்களுக்கு இது எட்டாக் கனியாகிவிட்டது. அது மட்டுமல்ல, மனப்பாட முறையை அடிப்படையாகக் கொண்ட நமது பாடத்திட்டம் E learning முறைக்கு ஏற்றாற் போல தயாரிக்கப்படவில்லை. தேர்வுகளையும், மதிப்பெண்களையும் சார்ந்திருக்கும் நமது கல்விமுறையின் தன்மையே வேறு. இங்கு ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஆத்மார்த்தமானது. தன் குழந்தையைப் பார்த்தவுடன் ஒரு ஆசிரியரால் மட்டுமே அவன் மனநிலை, குடும்பச் சூழல், கற்றல் திறன்கள் மற்றும் அவனது பிரச்சினைகளை புரிந்து அவனுக்கு ஏற்றாற் போல தனது கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ள முடியும். இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க நம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்முடைய கல்வி அமைப்பு இன்னும் பயிற்சியளிக்கவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் நம்மிடையே இல்லை. அதன் காரணமாக நம்மால் இன்னும் நிஜ வகுப்பறையிலிருந்து மெய்நிகர் வகுப்பறைக்கு மாற முடியாமல் தவிக்கிறோம்.
பள்ளி என்பது சக மாணவர்களுடன் உறவாடுவதற்கும், எதிர்கால சமூகத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவற்குமான அனுபவங் களைத் தரக்கூடிய இடம். இத்தகைய அனுபவங் களை ஒருபோதும் இணையக் கல்வி தந்துவிட முடியாது இந்த நோய் பாதிப்பில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது கல்வித்துறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்” என்கிறார் யுனெஸ்கோ தலைவர் ஆட்ரி அசௌலே. இது முழுக்க முழுக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கே பொருந்தும். ஏனெனில் அரசுப் பள்ளியில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களிடம் கணினியோ, இணையதள வசதிகளோ இல்லாதபோது இணையக்கல்விக்கு இங்கு இடமேதுமில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதை உறுதிசெய்வது நமக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும். பசியுடனும், பட்டினியுடனும் நடந்தே தங்கள் பிறப்பிடம் சென்று விட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி இனி கானல்நீர் தான். குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும், குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம். ஆன்லைன் கற்றலுக்குத் தேவையான எந்தவித வசதிகளும் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கொண்ட தனியார் பள்ளி மாணவர்களுக்குமிடையேயான இந்த டிஜிட்டல் பிளவு கல்வியில் மேலும் மேலும் ஏற்றத்தாழ்வுகளுக் குத்தானே வழி வகுக்கும். இணையக்கல்விக்கு மாற்றாக வந்த தொலைக்காட்சிக் கல்வி எந்த அளவு பயன்தருகிறது என்பதும் கேள்விக்குறியே. மாணவரின் கற்றல் திறனை மதிப்பிட ஒருபோதும் வாய்ப்பில்லை.
எத்தகைய ஏற்றத் தாழ்வுகளை யும் கல்வியால் சரி செய்து விட முடியும் என்ற நமது நம்பிக்கையும், அதற்காக அரசு எடுக்கும் முன்னெடுப்புகளுமே நமது பலம். இந்தப் பேரிடர் காலம் நமது பலத்தை அசைத்துப் பார்க்கிறது. எதிர் வரும் டிஜிட்டல் காலத்தின் தேவைக்கேற்ப நாமும் கற்றல் கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய நேரமிது. சவால்களை சமாளித்து பாடத்திட்டங்களிலும் , கற்றல் கற்பித்தல் முறைகளிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, மின் கற்றலுக்கு நாமும் தயாராக வேண்டியது அவசியம். அரசும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விலையிலா கணினிகளை வழங்கி புதியதோர் கல்வி முறைக்கு இளம் தலைமுறையினரைத் தயார் செய்திட வேண்டும்.