பல பெண்களுக்குத் தங்கள் கூந்தலுக்கு வண்ணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், செயற்கை ரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்தினால் முடி பாதித்துவிடுமோ என்று அந்த ஆசையைக் கைவிட்டுவிடுவார்கள். அப்படப்பட்டவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. இயற்கை முறையில் எப்படி ஹேர் கலர் செய்யலாம் என்று பாப்போம்.
மருதாணி நிறம்
மருதாணி நிறத்தில் இயற்கையாக முடியை கலர் செய்யத் தேவையான பொருட்கள், மருதாணித் தூள் மற்றும் பீட்ரூட் சாறு. இரும்புக் கடாயில் மருதாணி மற்றும் பீட்ரூட் சாறு இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு நாள் அப்படியே விடவும். மறுநாள் அந்தக் கலவையை முடியில் தடவி 2 மணி நேரம் விடவும். பின் கூந்தலைச் சாதாரணமாக ஷாம்பூ போடாமல் அலசவும். கலர் செய்தபின் உங்கள் தலைமுடியை 2 நாட்களுக்கு ஷாம்பூ போட்டுக் கழுவ வேண்டாம். அப்பொழுதுதான் அந்த நிறம் உங்கள் முடியில் நன்றாகப் பிடிக்கும்.
இந்தப் பீட்ரூட் மற்றும் மருதாணி கலவை இரும்புக் கடாயில் கலக்கப்பட்டதால் நல்ல அழகான ஆழமான நிறத்தை உங்களுக்குத் தரும். வாரம் ஒரு முறை இதனைச் செய்யலாம். Straightening / smoothening/ keratin / Hair coloring/ perming போன்ற சிகிச்சைகளுக்குச் செல்பவர்கள் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டாம். மருதாணி பூசப்பட்ட முடியில் ரசாயன சிகிச்சைகள் வேலை செய்யாது.
அவுரிப் பொடி
அவுரிப் பொடியை வைத்து கருமையான வண்ணம் பெறலாம். மருதாணி தடவிய அடுத்த நாள் இதை செய்யலாம். அவுரிப் பொடியை நீரில் கலந்து 10 நிமிடம் கழித்து, தலையில் தடவி அந்தக் கலவை 1 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். பின் சாதாரணமாக ஷாம்பூ போடாமல் வெறும் நீரில் கழுவவும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதனைச் செய்யலாம். மருதாணியின் சிவப்பு நிறத்தை விரும்பாதவர்கள் அவுரிப் பொடியைத் தடவினால் இயற்கையான கருப்பு நிறம் கிடைக்கும்.
இந்த இயற்கை நிறங்கள் நரை முடியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் ரசாயன நிறங்களை விரும்பாதவர்களுக்குமே பரிந்துரை செய்யப்படுகின்றன. இவை இயற்கையான முறையில் செய்யப்படுவதால் இந்த நிறம் 15 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.