day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

” நடைமுறையில் எப்போது பெண்களுக்கான 33% ஒதுக்கீடு ? ” – சிவகாமி ஐ.ஏ.எஸ். கேள்வி

” நடைமுறையில் எப்போது பெண்களுக்கான 33% ஒதுக்கீடு ? ” – சிவகாமி ஐ.ஏ.எஸ். கேள்வி

அரசுப்பணியில் அதிரடி காட்டியவர் சிவகாமி ஐ. ஏ.எஸ். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரச்னை,பஞ்சமி நிலம் மீட்பு, நிலஉரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவர். மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என்றால் அதிகார மட்டத்தில் இருந்தால் போதாது, அரசியல் மட்டத்தில் செல்வாக்கு பெற வேண்டும் என்பதை உணர்ந்து,அரசியலிலும் குதித்தவர்.அதோடு நில்லாமல் மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய எழுத்துகளிலும் பிரதிபலித்தவர்.  அதிகாரம் , அரசியல், பத்திரிகை உள்ளிட்ட  பன்முக தளங்களில் முத்திரை பதித்த சிவகாமி  ஐ. ஏ.எஸ். அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆட்சியராகவும் அதன்பிறகு வகித்த பதவிகளிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன, ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தில் செயலாளராகவும் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

“நான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாகவே பணியாற்றினேன் என்னுடைய உயர் அதிகாரிகள் என்னுடைய பணியை எப்போதும் பாராட்டி வந்தார்கள் நான் தென்னார்காடு மாவட்டத்தின் கூடுதல்  ஆட்சித்தலைவராகவும்  பணியாற்றிக் கொண்டே, இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஏஜன்ஸி என்கின்ற அயல்நாட்டு நிறுவனத்தின்  சுகாதார மேம்பாட்டு திட்டத்திலும் இரண்டு வருட காலம் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில் தென்னாற்காடு முழுவதும் 400 -க்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களை ஏற்படுத்தி செவிலியர்களை நியமனம் செய்து அவர்களுக்குப் பயிற்சி வழங்கி பல இன்னோவேட்டிவ் ஆன திட்டங்களை அறிமுகப்படுத்தி என்னுடைய மேல் அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றேன். அதைப்போல சுற்றுலாத்துறையில் பணியாற்றும் பொழுது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் கீழ் இயங்கிய ஹோட்டல்களின் நிலைமையை சீராக்கி முதன்முறையாக அதை லாபத்தில் அதிகரித்தேன் . மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்னுடைய பணியைப் பாராட்டி பொது மேடையில் என்னைக் கவுரவித்தார். இதன் காரணமாக மத்திய அரசு எனக்கு கிழக்கு நாடுகளின் சுற்றுலா மையத் தலைவராக 1997 முதல் 2001 வரை ஜப்பானில் பணி செய்யும் வாய்ப்பை வழங்கியது. பிறகு தொழிலாளர் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய பொழுது குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் இவர்களை மீட்கும் பணிகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அறிக்கை தயாரித்தேன். அந்த அறிக்கையை ஜெனிவா நகரத்தில் நடந்த நிகழ்வில்  வாசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆதிதிராவிட நலத் துறையில் செயலாளராகப் பொறுப்பு ஏற்றதும் காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அரசு ஆணை தயாரித்ததுடன், சிறப்பு உட்கூறு திட்டத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்றேன். இப்படி பல விஷயங்களைக் கூறலாம். மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றும் போது அரசியல்வாதிகளின் இடையூறு இருக்கத்தான் செய்தது. அதனுடைய மோசமான தாக்கங்களிலிருந்து நான் மெல்ல வெளியே  வந்தேன்.

முதல் நாவல் ‘பழையன கழிதலும்’ எப்படி உருவானது? எழுத்தை நோக்கி உங்களை நகர்த்தியது எது?

நான் பள்ளியில் படிக்கும் பொழுதே சிறப்பாக கட்டுரை களை எழுதுவதைக் கவனித்த எனது தமிழாசிரியை ஜோதி மேரி அவர்கள் தன்னுடைய நண்பர் நடத்திவந்த தென்னொலி என்கின்ற கிறிஸ்தவ பத்திரிகைக்கு கதை எழுதும் படி கேட்டார். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.  எனது ஆர்வம் பன்மடங்காக்கியது. நான் கதை எழுதத் துவங்கினேன். அது அந்தப் பத்திரிகையிலும் வெளிவந்தது. மீண்டும் திருச்சியில் புனித சிலுவைக் கல்லூரியில் இளங்கலை மாணவியாக இருந்தபோது தினமணி பத்திரிகை நடத்திய மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் “ஒரு ஆட்டுக்குட்டி கத்துகிறது” என்ற கதையை எழுதி இரண்டாம் பரிசு பெற்றேன். அதன் பின்னர் 1986இல் “இப்படிக்கு உங்கள் யதார்த்தம் உள்ள…” என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது. 1986இல் எழுதப்பட்ட “பழையன கழிதலும்” என்ற என் முதல்  நாவல் அன்னம் பதிப்பகத்தார் மூலம் 1988இல் வந்தது. அம்மாவின் கதை சொல்லல்,அப்பாவின் வீரமும் விவேகமும் பொருந்திய பேச்சுக்கள், எனது மனம் கவர்ந்த ஆசிரியைகளின் ஆதரவு என்னை இலக்கியத்தை நோக்கி நகர்த்தின என்றால் அது மிகையாகாது. பழையன கழிதலும் நாவலின் கதைக்களம்  கிராமமும் அங்கே நானும் பிறரும் சந்தித்து கண்டுணர்ந்த பல்வேறு பிரச்சினைகளும் காட்சிகளும் ஆகும்.

1989இல் நீங்கள் எழுத வந்தபோது இலக்கியச் சூழல் எப்படி இருந்தது? உங்களுடைய எழுத்துக்கு வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்ததா?

என்னுடைய முதல் நாவல் வெளிவந்ததும் நான் எதிர்பார்த்திராத அளவு முற்போக்கு இலக்கியச் சங்கத்தை சேர்ந்த நண்பர்கள்  பட்டிதொட்டி யெல்லாம் எடுத்துக் கொண்டாடினார்கள். தலித் இலக்கியம் என்று அது வகைப்படுத்தப்பட்டது. எனது இரண்டாம் நாவல் “ஆனந்தாயி” 1993இல் வெளிவரும் வரைக்கும் ஏதாவது ஒரு பத்திரிகையில் அடிக்கடி என்னுடைய முதல் நாவல் பற்றிய பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன.

‘புதிய கோடாங்கி’ பத்திரிகை அனுபவம் குறித்துச் சொல்லுங்கள். ஆரம்ப நாட்களுக்கும் இப்போதைக்கும் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

புதிய கோடாங்கி 1995 இல் காலாண்டு இதழாக ஆரம்பிக் கப்பட்டு 2001 ஆம் ஆண்டு தொடங்கி மாத இதழாக இருபத்தி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது சாதனைதான். சீரிய இலக்கிய படைப்புகள்- கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் இவற்றோடு அரசியல்  செய்திகள் கலந்தும் வருகிறது. இப்பத்திரிகை மூலம் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர்.  பஞ்சமி நில மீட்பு  உள்ளடக்கிய தலித் நில உரிமை இயக்கம், பெண்கள் முன்னணி போன்ற இயக்கங்களை வளர்த்த பெருமை புதிய கோடாங்கி பத்திரிக்கைக்கு உண்டு. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது கொண்டாடப்பட வேண்டியது.

2008இல் விருப்ப ஓய்வு பெற்றது அரசியல் பங்களிப்புக்காகத்தானா? அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது மக்களின் எண்ணங்களைக் கற்றுக்கொள்ள ஒரு வழி. ஒரு பெண் என்னைப் பார்த்துக் கேட்டார் நீங்கள் இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தீர்கள் என்று.  நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் தமிழகம் தழுவிய மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் கொள்கைகள் உருவாக்க சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுபவர். அவர் வீடு வீடாக வருவது சிரமம். தனக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை செய்து கொடுக்கும் ஒரு கவுன்சிலர் போலவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் கல்வித் தகுதி என்பது இரண்டாம் பட்சமே. மக்களுக்குத் தொடர்ந்து அறிமுகமாகி அவர்கள் மனதிலே ஒரு நீங்க முடியாத இடத்தைப் பெறுவது என்பது பெரிய கட்சியின் ஆதரவு  பெற்றவருக்கு,சினிமாவில் நடித்துப்  பிரபல மானவருக்குமே சாத்தியப்படலாம். ஆனால் என்னைப்போன்ற அதிகம் அறியப்படாத  மற்றும் தமிழகத்தில் அதிகம் அறிமுகமாகாத கட்சியைச் சேர்ந்த ஒரு தனி நபருக்கு சாத்தியம் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு தலைவர் என்பவர் மக்களால் உருவாக்கப்படுபவரே.  தன் வீடு தேடி வந்து அறிமுகமாக வேண்டும் என்று மக்கள் நினைப்பது இயல்புதான் என்றாலும், தான் விரும்புகின்ற தலைவர் யார் என்று அவர்களும் தேட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசியல்  விழிப்புணர்வு இல்லாத வரை தேர்தலில் பங்கு கொள்வது என்பது பாடம் கற்றுக் கொள்வதாகத் தான் இருக்க முடியும்.

விருப்ப ஓய்வு பெற்றதும் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநிலத்தின் பொதுச் செயலாளராக சிறிதுகாலம் பணிபுரிந்தேன். அந்த அனுபவம்  நானும் கூட ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்து நடத்தலாம் என்ற ஊக்கத்தையும் நம்பிக்கையும் அளித்தது.  அதற்காக பகுஜன் சமாஜ் கட்சிக்கு  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சமத்துவ மக்கள் படை என்கிற கட்சியை ஏன் தொடங்கினீர்கள்? அதன் நோக்கமும் என்ன?

சமூக சமத்துவ படை  கட்சி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தலித் நில உரிமை இயக்கத்தின் கொள்கைகளும், பெண்கள் முன்னணியில் முன்னெடுத்த கோரிக்கைகளும் கொண்டு  பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒதுக்கீட்டின் பயனை அடையாத சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பலதரப்பு மக்களின் நன்மைகளைக் கொள்கைகளாகக் கொண்டுள் ளது. மொத்தத்தில் அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் வாய்ப்புகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்ட நிலையில் சுமுகமான உறவுடன் வாழ்வதற்கான இலக்குகளைக் கொண்டு இந்தக் கட்சி இயங்குகிறது.

தொடர்ந்து திராவிடக் கட்சிகளைக் கடுமையாகச் சாடி வருகிறீர்களே, நீங்கள் காண விரும்பும் மாற்றங்கள் என்ன? உங்கள் அரசியல் நிலைப்பாடு, செயல்பாடு குறித்துச் சொல்லுங்கள்.

திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக வந்த பொழுது தமிழ் வளர்ச்சி,சமூக நீதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்ததைப் பலரும் பாராட்டுகின்றனர். எனினும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் என்பன என்பவை மிகக் குறைவாகவும்,வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவாகவும் உள்ளதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வழங்கும்போதே சாத்தியமாகும் என்று கூறி வருகிறோம். பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெறுபவர்கள் 7 சதவீதம் பேர் என்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் அவர்கள் இந்த சட்டத்தின் ஷரத்துக்கள் படி வருடம் ஒருமுறை இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த முதல்வரும் ஒருமுறைகூட இந்த சட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்யவில்லை. ஆதிதிராவிட நலப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கு விடுதிகள் பற்றாக்குறை நகர்ப்புறங்களில் உள்ளது. பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளிகள் மிகமோசமான நிலைமையில் நடத்தப்படுகின்றன. திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தேர்தலில் பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலைமை உள்ளது. இதற்கெல்லாம் தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆண்ட இந்த திராவிடக் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன? அரசியலில் பங்கெடுக்க விரும்பும் பெண்கள் தங்களை எப்படித் தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும்?

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்ற  வரைவு சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு லோக்சபாவிற்கு வராமலேயே நின்றுவிட்டது. காரணம். இது 33 சதவிகிதத்தை பல தரப்பு பெண்களுடன் அதாவது பல சமூகங்களைச் சேர்ந்த பெண்களுடன் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்ற திட்டம் எதுவும் இந்த சட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு இல்லை என்பது  வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த சட்டத்தின் பயனை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுடன் பகிர்ந்து கொள்ள உயர்த்தப்பட்ட வகுப்பில் உள்ள பெண்களுக்கு உடன்பாடு இல்லை. இதன்காரணமாக இந்த சட்டம் மார்ச் 10, 2010 ஆம் ஆண்டு ராஜ்ய சபாவுக்கு வந்ததோடு பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்கள் பிரதிநிதிகள் 15 சதவீதத்தை தாண்ட முடியாத நிலைமைதான் உள்ளது. பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற அவர்களுக்கு பொருளாதார அடிப்படையும் அவசியம். அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு பெண்கள் அமைப்புகள் பணம் வசூலித்து தேர்தல் செலவுக்காகக் கொடுக்கின்றன. அந்த மாதிரி நடைமுறை வந்தால் இங்குள்ள பல பெண்கள் தேர்தலில் போட்டியிட முன் வருவார்கள். மேலும் பெண்கள் அரசியலை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலை உள்ளது. அது தேவையில்லாத ஒன்று  என்ற பரப்புரை பெண்களுக்கு எதிராகச் செய்யப்படுகிறது. ஆனால் பெண்களின் அரசியல் பங்கேற்பிற்காக முன்னேறிய பெண்கள் தொடர்ந்து பாடுபட வேண்டிய அவசியம் உள்ளது.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!