புறந்தள்ளியே வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் பரியேறும் பெருமாள். 2018ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக்குவித்தது. தவிர, அதில் நடித்த அத்தனை கலைஞர்களின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. இதில் குறிப்பாக, அப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து புகழ்பெற்றவர் தங்கராசு. இவர், ஒரு நாட்டுப்புற கலைஞர். நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வரும் தங்கராசு, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோயில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். விழாக்கள் இல்லாத நேரங்களில் இரவு நேரக் காவலாளியாகவும், அங்குள்ள மார்க்கெட்டில் இழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை வாங்கிவைத்து விற்பனை செய்துவருகிறார். என்றாலும், இவருடைய வருமானம் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை. இதனால், அவர் இருந்த குடிசை வீட்டையும் முறையாகப் பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார். இவருடைய நிலையை அறிந்த முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு உதவ பலவழிகளில் முயற்சி மேற்கொண்டது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவும், இவருக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அதன்பயனாக பலரின் உதவியுடன் (மாவட்ட நிர்வாகம், மு.எ.க.ச) தங்கராசுக்கு வீடு கட்டப்பட்டது. அந்த வீட்டை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்துவைத்தனர். அந்த வீட்டுக்கான சாவியையும் தங்கராசு குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.