பேராசிரியர்,விளம்பரங்கள் வடிவமைப்பாளர், ஈவன்ட் மேனஜ்மெண்ட், தொழில் முனைவோர், குறும்படங்கள் இயக்குநர், கதை சொல்லி, குடும்பத் தலைவி உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்டவர் ரம்யா வாசுதேவன். பெண்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி என்பதை விட, புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு இவர் ஒரு நூலகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய தொழில் திறமை வீறு நடைபோடுகிறது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
” உங்களைப் பற்றிய அறிமுகம் தேவை?”
“ஒரு வடிவமைப்பாளராகத் தொடங்கி விளம்பரங்கள் வடிவமைப்பு மற்றும் போஸ்டர்கள் வடிவமைப்பு என பல்வேறு வகையான கலைப் பொருட்கள் செய்வது உள்ளிட்ட நிலைகளில் எனது பயணம் தொடங்கியது. என்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்காக நிகழ்வு (ஈவன்ட் மேனஜ்மெண்ட்)செய்து கொடுத்தேன். இதற்கு நிறைய வேலை ஆட்கள் தேவைப்பட்டனர். அதனால் கல்லூரி மாணவர்களை வைத்து செய்யலாம் என்று யோசித்தேன். இது தொடர்பாக லயோலா கல்லூரியின் இயக்குநர் அவர்களை சந்தித்துப் பேசிய போது மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும், அவர்களுக்கு முறையாகப் பயிற்சியையும் கொடுங்கள் என்றும் கூறினார். அதன் பிறகு மாணவர்களை ஈடுபடுத்தி செய்வதோடு இது அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. இவ்வாறு தான் எனது ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பயணம் தொடங்கியது.”
“நீங்க படிச்ச கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்?”
“கதை சொல்லும் என் கனவுகள் மெய்ப்பட “under the tree” என்ற குழுவை ஆரம்பித்து 700 கதைகளுக்கு மேல் சொல்லியிருக்கிறேன். என் கதைகளைக் கேட்க 5000 பேர் உள்ளனர். அனைத்து விதமான சிறுகதைகள், ஜெயகாந்தன், லாசரா, தி ஜானகிராமன் என்று பல எழுத்தாளர்களுடைய சிறுகதைகள், அறிமுக எழுத்தாளர்களுடைய கதைகள் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களில் வருகின்றன கதைகள் , பிளாக்ஸ், ஆன்மீகத் தொடர், உள்ளிட்ட அனைத்தையும் ஆடியோவாக ரெக்கார்டு செய்து அதனை என்னுடைய கதை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘எனது குழு சார்பாக அனுப்பி வருகிறேன். அதேபோன்று “under the tree” குழுவின்கீழ் உருவாக்கப்படும் கதைகளை மாவட்டந்தோறும் உள்ள அரசு நூலகங்களில் இலவசமாக ஆடியோ பைல்களாகவும்’ கொடுத்துள்ளேன். நான் படித்த லயோலா கல்லூரியில் பணியாற்றி இருக்கிறேன். அதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.கல்லூரியின் இயக்குநர் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தார். அதனால் என்னால் படித்த கல்லூரியில் பணியாற்ற முடிந்தது. குறிப்பாக, தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சம்பளமும் கிடைப்பது கூடுதல் சலுகை. அதனால் நான் மேற்கொண்ட இந்த பயிற்சியில் வெற்றி பெற முடிந்தது.
“நீங்க தலைமை வகிப்பது ஈவன்ட் மேனஜ்மெண்ட் துறை. அதைப்பற்றி சொல்லுங்க?”
“சுமார் 12 வருடங்களாக ஈவன்ட் மேனேஜ்மெண்ட் துறையில் இருக்கிறேன். ஈவன்ட் மேனேஜ்மெண்ட் என்பது ஒரு பொிய கடல் போன்றது. அதில் குடும்ப விழாக்களை எடுத்து நடத்தலாம். கார்ப்பரேட் கெட் டு கெதர் விழாக்களையும் நடத்தலாம். புதிய பொருட்களின் அறிமுக நிகழ்வுகளையும், எடுத்து நடத்தலாம்.இதில் மிகுந்த செல்வாக்குடன் தனிச் சிறப்புடனும் இருக்கிறோமா என்பதில் தான் அதன் வெற்றியே உள்ளது. என்னை பொருத்தவரை நான் தேர்வு செய்த கார்ப்பரேட் ஈவன்ட் மற்றும் கெட் டு கெதர் ஈவன்ட் உள்ளிட்ட நிகழ்வுகளில் கவனம் செலுத்தினேன்.ஆரம்பத்தில் பெரிய ஷாப்பிங் மால்களில் வருகிற வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வுகளை நடத்தி வந்தேன். அதன்பிறகு இதனுடன் மேலும் கூடுதலான நிகழ்வுகளையும் நடத்தி வருகிறேன்.
2007 ஆம் ஆண்டில் பொிய அளவிலான சம்மர் கேம்ஸ் அதாவது, பிலிம் மேக்கிங் பார் கிட்ஸ் என்பதை ஆண்டுதோறும் குழந்தைகளுக்காக ஒரு முகாம் நடத்துவேன். அதோடு பிறந்த நாள் நிகழ்வு எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். குறிப்பாக, பிறந்த நாள் போன்ற நிகழ்வுகள் நடத்தும்போது அதிலேயே ரேடியோ நிகழ்ச்சியைப் போன்று கூடுதல் அறிவுள்ள விஷயங்களில் வடிவமைத்திருந்தேன். நிகழ்வில் குழந்தைகள் பங்கேற்றார்கள் என்பதைவிட,அதில் இருந்து பல தகவல்களையும் தெரிந்துகொண்டு அவர்களுடைய சிந்தனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிகழ்வின் நோக்கமாக இருந்தது. “
“இத்தனை செயல்பாட்டுக்கு நடுவுல எவ்வாறு குடும்பத்தைக் கவனிக்கிறீங்க?”
“இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் குடும்பத்தை நான் கவனிக்கத் தவறுவதில்லை. அவரவர்க்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கிறேன். சற்று சிரமமாக இருந்தாலும் வீட்டிற்காகத்தான் இத்தனை வேலைகளை செய்கிறோம். அவர்களைக் கவனிக்கத் தவறினால் மற்ற வேலைகளைச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை .
என்னுடைய குடும்பத்தைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய கணவர் வாசுதேவன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். எனக்கு மிகவும் உறுதுணையாக என்னுடைய குடும்பத்தினர் உள்ளனர். என்னுடைய குடும்பத்தினர் என்னுடைய தோல்விகளையும் சந்தோஷமாக எடுத்துக்கொண்டார்கள். அதேபோல் என்னுடைய வெற்றிகளையும் சந்தோஷமாக எடுத்துக்கொண்டார்கள். அதனால்தான் என்னால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்பதே உண்மை. “
“MCCI போன்ற கூட்டமைப்புளிலும் உறுப்பினரா இருக்கீங்க. அது குறித்து சொல்லுங்க.”
“MCCI-யில் அங்கம் வகிக்கிறேன். இது தற்போது தொழில் நிறுவனங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக உள்ள அமைப்பு.தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் செய்யவும் புதிய வழிமுறைகளைப் பின்பற்றவும் இந்த அமைப்பு உதவியாக இருக்கிறது. எதில் நம்மால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அதனோடு இணைந்து இருப்பது தொழில் முனைவோர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக, தொழில் நிறுவனங்களோடு இணைந்து இருப்பதை முக்கியமானதாக கருதுகிறேன். “
“பிசினஸ் என்பது ஆண்கள் ஆதிக்கம் உள்ள துறை.அதிலும் உங்களுடைய பங்களிப்பு இருப்பது தெரிகிறதே ? “
“தொழிலில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாட்டை நான் பார்க்கவில்லை. இதில் ஆண்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அவர்கள் தொழிலை மட்டும் பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.பெண்களுக்கு அவ்வாறு இல்லை. அவர்களுக்குக் கூடுதலாக குடும்பம் இருக்கிறது. குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பெண்கள் தொழிலபதிராக இருந்து சமையலுக்கு ஆள் வைத்தாலும் என்ன சமைக்க வேண்டும் என்பதை அந்தப் பெண் தான் தீர்மானித்தாக வேண்டும். அப்படியான நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் குடும்பப் பொறுப்பைக் கவனிப்பதை நான் சுமையாக, பலவீனமாகப் பார்க்கவில்லை. அதை நான் பலமாகப் பார்க்கிறேன். எந்தத் துறையாக இருந்தாலும் ஆண் பெண் பாகுபாடு இருக்கக்கூடாது என்று கருதுகிறேன். தரமாகப்பணியைச் செய்து முடிக்கிறார்களா என்பது தான் முக்கியம். பெண்களுக்கு இத்தனை மணிக்குள் வேலைக்குச் சென்று இத்தனை மணிக்குள் வந்து விட வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கிறது. அதோடு வேலைப்பளுவும், மன அழுத்தமும் பெண்களுக்கு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்குவதற்கு ஏற்றவர்களாகப் பெண்கள் இருப்பதுதான் தனிச் சிறப்பு. அதனால் என்னைப் பொருத்தவரை தொழிலில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கவில்லை.”