ஏழைப் பெண்களுக்கு
சேவை செய்யும்
சோனாலி பிரதீப்
கோவை கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்த சோனாலி பிரதீப் என்பவர் தனது ‘அம்மா சேவா அறக்கட்டளை’ மூலம் கல்விக்கட்டணம் தொடங்கி திருமண சீர்வரிசைப் பொருட்கள் வரை வழங்கி ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்ளுக்கு சொந்தச் செலவில் மருத்துவக்குழுவினரை அழைத்துச்சென்று மருத்துவ உதவி, நிவாரணப் பொருட்கள் என வழங்கியிருக்கிறார்.
இவரது பூர்வீகம் வட இந்தியாவாக இருந்தாலும் ஒரு தலைமுறைக்கு முன்னதாகவே தமிழகத்திற்கு சோனாலி பிரதீப்பின் குடும்பம் இடம் பெயர்ந்துவிட்டது. அம்மா சேவா அறக்கட்டளை மூலம் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல ஏழைப் பெண்களுக்கு கட்டில், பீரோ, பாத்திரங்கள் என திருமண சீர்வரிசைப் பொருட்களை வழங்கியுள்ள இவர், ஒரு சிலரின் ஏழ்மை நிலையை அறிந்து தாலியும் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் கொரோனா முன்கள வீரர்களாக கருதப்படும் தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு அவ்வப்போது தனது இல்லத்தில் அசைவ விருந்தளித்து விருந்தோம்பல் செய்து அனுப்பி வருகிறார். மலைவாழ் மக்கள் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் கிராமப் பிள்ளைகள் கடந்த கல்வியாண்டில் மீண்டும் கற்றலைத் தொடங்கியிருக்கின்றனர். மாதம் இருமுறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களில் ஒருத்தியாக இருந்து நிறை குறைகளைக் கேட்டறிகிறார். சோனாலியின் இந்த அறப்பணிக்கு அவரது கணவரும், தொழிலதிபருமான பிரதீப் ஜோஸ் பக்கபலமாகத் துணை நிற்கிறார்.
உலகம் இயந்திரமயமாகி வரும் நிலையில் எல்லோரும் தன்பெண்டு, தன்பிள்ளை, தன் குடும்பம் என அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் போல் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என நினைப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். அந்த வகையில் சோனாலி நம்மிடையே வித்தியாசமானவராகத் திகழ்கிறார்.
– சோனாலி பிரதீப்