நம் நாடு, கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை அதிகமாக வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் 50 சதவிகிதத்திற்கும்மேல் இந்த இரண்டு பொருட்களும் உள்ளன. இதனால், நம்முடைய அந்நிய செலாவணி குறைவதாகவும், கூடுவதாகவும் அவ்வப்போது பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். இந்த அந்நிய செலாவணியானது என்பது வேறொன்றுமில்லை. வெளிநாட்டுப் பணமே அந்நியச் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், நம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஐந்து வாரங்களில், 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 247 கோடி டாலர் குறைந்து, 60 ஆயிரத்து 400 கோடியே 40 லட்சம் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு, அந்நிய செலாவணி சொத்துக்களின் கூர்மையான வீழ்ச்சியே காரணமாகும் என கூறப்படுகிறது.