வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்ன நாகல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி அன்பு. இவர், நேற்று இரவு தனக்கு சொந்தமான ஏழு ஆடுகளை ஆட்டு பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின் இன்று காலை ஆட்டு பட்டிக்கு சென்று பார்த்தபோது ஆடுகள் அனைத்தும் வயிறு கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த அன்பு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆடுகள் மர்மாக இறந்துகிடப்பது குறித்து கிராம மக்களிடம் விசாரித்தபோது, சின்ன நாகல் பகுதி மலைகளை சுற்றியுள்ள கிராமம் என்பதால் இங்கு சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாகவும், சிறுத்தைகள் கடித்துக்கூட ஆடுகள் இறந்து இருக்கலாம் எனவும், சிறுத்தைகளை பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து வனத்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த கே.பந்தரப்பள்ளி என்ற பகுதியிலும் இதே போன்று ஒன்பது ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடுகள் உயிரிழந்து இருப்பது, உணவு தேவைக்காக காட்டு விலங்குகள் வேட்டையாட முயற்சி செய்து உயிரிழந்து இருக்கலாம் என்பதால் வனத்துறை தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.