சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் விவசாயிகள் நலனுக்கு எதிரான எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கமாட்டோம் என தெரிவித்து வாக்குகள் சேகரித்தனர். ஆனால், தற்போது எட்டு வழிச்சாலை திட்டம் வேறு பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் திமுக அரசு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்ததிட்டத்தை கைவிட வேண்டும் என கூட்டு இயக்கத்தின் தலைவர் கே.கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.