தேர்தல் களத்தில் இளையோர் படை!
அரசியலுக்குள் பெண்கள் நுழைவது என்பது ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைக்கும் அளவுக்கு அசாத்தியமானது. ஆனால், அந்தச் சவாலைக்கூட மிக நேர்த்தியாகச் சமாளித்து இன்று பெண்கள் பலர் அரசியல் களம் காண்கின்றனர். கட்சிப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களையும் அரசியல் களத்தில் காணமுடிகிறது. இந்த நல்ல மாற்றங்களுக்கு இடையே இளம் பெண்களின் வருகை அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாகச் சுடர்விடுகிறது.
தற்போது தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு குறைவுதான் என்றபோதும், இளையோரின் வருகை வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் மூத்த பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின. ஆனால், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற வளர்ந்துவரும் கட்சியில் இளம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் வெற்றிபெறுகிறார்களா இல்லையா என்பதைவிட அவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பிரதிநிதித்துவம் முக்கியமானது. அரசியலில் ஈடுபட நினைக்கும் இளம் பெண்களுக்கு இது ஊக்கச் சக்தியாக விளங்கும்.
கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இளம் பெண் வேட்பாளர்களைக் கட்சிகள் களமிறக்கின. அனுபவமும் வயதும் முதிர்ந்த மூத்தவர்கள்தான் அரசியலுக்குச் சரிப்படுவார்கள் என்கிற பொதுப்புத்தியை இந்த இளம்பெண்கள் கூட்டம் முறியடித்து முன்னேறியது. துறுதுறுப்புடனும் கண்களில் ஒளியுடனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்த இளையோர் படைக்குப் பொதுமக் களிடமும் நல்ல வரவேற்பு.
ஆயிஷே கோஷ்
26 வயதாகும் ஆயிஷே கோஷை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. 2020இல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தாக்குதலில் மிக மோசமாகத் தாக்கப்பட்டார். தற்போது அந்தப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கும் ஆயிஷே கோஷ், மேற்கு வங்க மாநிலம் ஜமூரியா தொகுதியின் வேட்பாளர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களில் தன் தந்தையும் ஒருவர் என்று சொல்லும் ஆயிஷே அதுபோன்ற அடித்தட்டு மக்களுக்கு உழைப்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
ப்ரீத்தா தா
இந்திய மாணவர் சங்கத்தின் தலை வரான ப்ரீத்தா தா (28), மேற்கு வங்க மாநிலம் வர்தமான் தக்ஷின் தொகுதியின் வேட்பாளர். முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவரது தந்தை ப்ரதாப் படுகொலை செய்யப்பட்டபோது ப்ரீத்தாவுக்கு 19 வயது. அரசியல் காரணங்களுக்காகத் தன் தந்தை படுகொலை செய்யப்பட்டது, அரசியல் கட்சிகள் குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிட்டதன் விளைவு என்று தன் பிரச்சாரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதைத் தங்களைப் போன்ற இளைஞர்களின் வரவால் மாற்ற முடியும் என்கிற உறுதியையும் அவர் அளித்தார்.
அரிதா பாபு
கேரள சட்டப்பேர வைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட மிக இள வயது வேட்பாளர் அரிதா பாபு. 27 வயதாகும் இவர் ஆலப்புழா மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் வேட்பாளர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பால் விற்று அந்த வருமானத்தின் மூலம் தன் குடும்பப் பொருளாதாரத்துக்கு உதவுகிறார். 2015 ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆலங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது கேரளத்தின் மிக இள வயது ஊராட்சி மன்றத் தலைவி எனப் போற்றப்பட்டார்.
மிதுனா
28 வயதாகும் மிதுனா, கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வாண்டூர் தொகுதியின் வேட்பாளர். இது அவரது முதல் தேர்தல் அல்ல. மலப்புரம் மாவட்டம் பல்லிக்கல் ஊராட்சி மன்றத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த வெற்றியின்மூலம் அந்த மாவட்டத்தின் இள வயது ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.