காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்டு 51 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய்கள் மூலமாகவும், மினி டேங்க் பம்பு மூலமாகவும் மாநகராட்சி குடிநீர் வழங்கி வருகிறது. அதில், 32ஆவது வார்டு பகுதியில் மட்டும் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 3 குடிநீர் குழாய்கள் மற்றும் ஒரு மினி டேங்க் பம்பு வசதி செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், கடந்த 2 மாதங்களாக இரவு நேரத்தில் 50க்கும் மேற்பட்ட குடிநீர் பைப்புகளில் இருக்கும் இரும்பு குழாய்கள் திருடப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்தபகுதி சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் பைக்குகளில் உள்ள இரும்பு குழாய்களை இரவு நேரத்தில் சைக்களில் வரும் மர்ம நபர் ஒருவர் திருடி செல்வதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரலாக பரவி வருகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், குடிநீர் குழாய்களை திருடிச்சென்று குடிநீர் வீணாவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.