பீஸ்ட் திரைப்படம் நடிகர் விஜய் நடித்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் இன்று அதிகாலை வெளியானது. விஜய் திரைப்படம் ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியாகி இருப்பதால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு திரைப்படம் பார்க்க அதிகாலை முதலே திரையரங்களில் குவிந்தனர். பல திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் மட்டுமே அனைத்து காட்சிகளும் திரையிடப்படுகிறது. கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரமாண்ட பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜா ஹேக்டே உள்ளிட்டோர் குழுவாக திரைப்படம் பார்த்தனர். இந்தநிலையில், சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையை கிழித்தனர். மேலும், திரையரங்கு கண்ணாடிகளை உடைத்ததாலும் சலசலப்பு ஏற்பட்டது.