தூக்கத்திற்கும் டிமென்ஷியா அதாவது மனச்சோர்வினால் ஏற்படும் ஒருவித ஞாபகமின்மை இவை இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளதா? பல வருடங்களாகப் பல ஆராய்ச்சிகள். ஆனாலும், இதற்கான தெளிவான பதில் கிடைக்கவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கை, நம் நடுத்தர வயதில் அதாவது 50 முதல் 60 வரை ஆறு மணி நேரம் அல்லது அதற்குக் குறைவான நேரம் இரவு தூக்கம் இருப்பவர்களுக்கு 70-களின் பின் பாதியில் இந்த நோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக அடித்துக் கூறுகிறது.
இதுவரை வெளியிடப் பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் பலவும், தூக்கத் திற்கும் நோய்க்குமுள்ளான தொடர்பைப் பற்றித் தெளிவான தகவலைத் தந்ததில்லை. அதாவது,தூக்க மின்மை டிமென்ஷியா விற்கான அடிப்படை காரணமா அல்லது நோய் வருவதைத் தூக்கமின்மை எளிதாக்குகிறதா என்பதற்கான விடை கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது இந்த ஆராய்ச்சி தூக்கமின்மைக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற பத்திரிகையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 25 வயதான 8000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் 50 வயது வரை அதாவது சுமார் 25 ஆண்டுகள் இதற்குத் தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவு பல கேள்விகளை எழுப்பி இருந்தாலும் அதன் முடிவு தெளிவையும் கொடுத்துள்ளது. காரணம், இந்தத் தேர்ந்தெடுத்த நபர்களில் ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நிலையைக் கொண்டவர்கள், அதிகமாக உறங்குபவர்களைவிட சுமார் 30 சதவீதம் டிமென்ஷியா வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாகக் கூறி இருக்கிறது. இதில் தேவைப்படும் தூக்கத்தின் அளவு 7 மணி நேரம் எனவும், குறைவான தூக்க நிலையில் உள்ளவர்கள் சுமார் 30 வருடங்களில் நோய் தாக்குதலுக்கு உட்படுவார்கள் என்றும் கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி யில் எந்த நேரடித் தொடர்பு மில்லாத மருத்துவர் கிரஸ்டைன்யஃப்பே என்பவர் கண்டு பிடிப்பை மிகவும் பாராட்டுகிறார். இவர் யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில் நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
டிமென்ஷியா என்பதன் தொடக்கம் நம் மூளைப் பகுதியில் அல்சைமர் நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை புரதத்தின் சேகரிப்பு ஏற்படுவதால்தான். இந்தச் சேகரிப்புகள் ஞாபகமறதி மற்றும் குறைவான அல்லது மந்த சிந்தனை செயல்பாடு வெளியில் தெரிய ஆரம்பிப்பதற்கு 15 முதல் 20 வருடங்கள் முன்பாகவே நிகழத்தொடங்குகிறது. இதற்கும் தூக்கமின் மைக்கும் நேரடியான தொடர்பு உள்ளதால், தூக்கமின்மை வரப் போகும் டிமென்ஷியாவை சுட்டிக்காட்டும் ஒரு கைகாட்டி யாகக் கருதலாம். இதன் தொடர்பாக டாக்டர் எரிக் ம்யூசெயிக் என்பவர் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். இவர் செண்டர் ஆன் பயலாஜிகல் ரிதம்ஸ் அண்ட் ஸ்லீப் எனும் வாஷிங்டன் நகரிலுள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் நரம்பியல் நிபுணராகவும் அந்நிறுவனத்தின் உதவி இயக்குநராகவும் பணிபுரிகிறார். இந்த ஆராய்ச்சியில் இவரும் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை. இவரின் கேள்வி “இது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதைப்போல் உள்ளது. தூக்கமின்மைதான் புரதச் சேமிப்பை ஏற்படுத்துகிறதா அல்லது புரதச் சேமிப்பால் தூக்கம் வராமல் போகிறதா” என்பதே.
இவர் தொடர்ந்து கூறுவது, இந்த ஆராய்ச்சியின் முடிவு இதைப்போன்ற கேள்விகளை எழுப்பினாலும், இதை ஓர் நல்ல தொடக்கமாகத்தான் கொள்ள வேண்டும். காரணம் பல சிறிய வயதுள்ளவர்களை ஆராய்ச்சியில் பங்குகொள்ள வைத்திருப்பதால், பல நேரம் அல்சைமர் நோய் அல்லது புரதச் சேர்க்கை அல்லது மனக்குழப்பங்கள் இவை ஏற்படுவதற்கு முன்பாகவே ஒரு சிவப்பு விளக்கு எரியத்தொடங்கிவிடுகிறது என்கிறார்.
இதேபோல் Whitehall II என்று கூறப்படும் ஆராய்ச்சி 1980களின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இதற்கு பிரிட்டிஷ் அரசுப் பணியாளர்கள் 7,959 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். இவர்களின் தூக்கம் பற்றிய தகவல் 1985 முதல் 2016 வரை சுமார் ஆறு முறை திரட்டப்பட்டது. தகவல்களை ஆராய்ந்த பின் வெளியிடப்பட்ட முடிவு இவர்களில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட 521 நபர்கள் அவர்களது 77வது வயதில் டிமென்ஷியா நோயால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முறை தொடர்பாக இதில் ஈடுபட்ட செவெரீன் சாபியா என்பவர் சிலவற்றைக் கூறி உள்ளார். இவர் ப்ரெஞ்ச் பப்ளிக் ஹெல்த் ரிசெர்ச் செண்டரான இன்செர்னில் தொற்றுநோயியல் நிபுணராகப் பணிபுரிகிறார். இந்த ஆராய்ச்சியில் ஒருவரின் தூக்க நிலை அல்லது டிமென்ஷியா நிலையை ஏற்படுத்தக்கூடிய பல காரணிகளான புகை பிடித்தல், குடிப்பழக்கம், உடற்பயிற்சி நிலை, பாடி மாஸ் இண்டெக்ஸ், பழம் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், படிப்பு நிலை, திருமண விவரம் மற்றும் ஹைபர் டென்ஷன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பலவற்றை இந்த ஆராய்ச்சியில் தொடர்புபடுத்திப் பார்த்திருப்பதாக இவர் கூறுகிறார்.
மேலும், தூக்கமின்மைக்கும் டிமென்ஷியா விற்கும் உள்ள தொடர்பைச் சில மனநோயாளி களை அவர்களின் 65 வயதிற்கு முன்னர் இவர்கள் தனியாக ஆராய்ச்சிக்கென தேர்வு செய்துள்ளார்கள். அதில் மனச்சோர்வு டிமென்ஷியாவிற்கு முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தவிர மனச்சோர்விற்கும் தூக்கமின்மைக்கும் உள்ள நேரடித் தொடர்பும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல் மனநோய் இல்லாதவர்கள் மீதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, தூக்கமின்மைக்கும் டிமென்ஷியா நிலைக்கும் தொடர்பைக் காட்டி உள்ளது.
இதன் அடுத்த நிலையாக எவ்வளவு பேர் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள், அதில் எவ்வளவு பேருக்கு ApoE4 என்ற அணு பிறழ்வு நிலையில் உள்ளது என்றும் தகவல்களைச் சேகரித்துள்ளார்கள். இந்த அணுப் பிறழ்வு அல்சைமர் வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியின் ஒரு முடிவு, தூக்க நிலைக்கும் நோய்க்கும் உண்டான தொடர்பில் ஆண் பெண் என்ற பால் வித்தியாசம் இல்லை. யுனிவர்சிட்டி ஆஃப் மினிசோடாவில் தொற்றுநோயியல் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் தொடர்பில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் பமீலா லுட்சே என்பவர் இந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இந்தக் கண்டுபிடிப்பு மிகச் சிறிய அளவில் தூக்கத்திற்கும் டிமென்ஷியாவிற்குமான தொடர்பை நிரூபித்துள்ளது. தூக்கமின்மை என்பது பலருக்கு உள்ளது. ஆகவே, ஒரு துளி அளவு இதற்கும் நோய்க்கும் தொடர்பு இருக்குமென்றால்கூட அது சமுதாயத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்க வல்லது”. இவரும் இந்த ஆராய்ச்சியில் நேரடியாகப் பங்கு பெறாதவர்.
ஆனால், எல்லா ஆராய்ச்சி களைப்போல இதற்கும் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, இந்த ஆராய்ச்சிக்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தனி நபர்களால் கொடுக்கப்பட்டவை. இதன் நம்பகத்தன்மை சற்றே கேள்விக்குரியதே. இதற்குப் பதிலாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 பேரின் தூக்க நேரம் அக்சிலரோமீட்டர் கொண்டு கண்டறியப்பட்டதாகவும் அந்தத் தகவல் அவர்கள் கூறி இருந்த தூக்க நேரத்துடன் சரியாக இருந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த வகையான சரிபார்ப்பு அவர்களின் 69 வயதிற்கு மேல்தான் செய்யப்பட்டது. அவர்களின் சிறிய வயதில் இதேபோல் செய்யப்பட்டிருந்தால், தகவல்களின் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும்.
மேலும், கூறப்படும் குறைபாடு, இந்த ஆராய்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் வெள்ளைத்தோல் கொண்டவர்களும், படித்தவர்களும், உடல் நிலையில் ஆரோக்கியமானவர்களுமாக இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டனின் மொத்த மக்கள் தொகை முழுவதும் அவ்வாறில்லை. தவிர, மின்னணு மருத்துவ தகவல்களை டிமென்ஷியா நோய் பற்றி ஆராய்வதற்கு உபயோகித்தபோது, தேவையான தகவல்கள் விட்டுப்போயிருக்கலாம். தவிர பாதிக்கப்பட்டவர்களின் நோய் வகை பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியின் பேராசிரியர் ராபர்ட் ஹோவார்ட் என்பவர் இந்த ஆராய்ச்சியின் முடிவை ஆய்வுசெய்து பின் முடிவுகளை நேட்யூர் கம்யூனிகேஷன்ஸ்சிடம் சமர்ப்பிக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இவர் பழைய நிலை மனநோய்ப் பிரிவில் இருப்பவர். இவரின் வார்த்தைகளில் இன்சோம்னியா அதாவது தூக்கமின்மை நிலையில் உள்ளவர்களுக்கு அவ்வாறு இருப்பதற்கு என எந்த ஒரு தனி காரணமும் தேவை இல்லை. இவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு தங் களுக்கு டிமென்ஷியா வந்துவிடுமோ எனும் அச்சத்தை இந்த நேரத்தில் உண்டு பண்ணிவிடும்.
ஆனாலும், இந்த இரண்டிற்குமான தொடர்பை நியாயப்படுத்தும் பல அறிவியல் கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக செரிப் ரோஸ்பைனலில் (பெருமூளைத் தண்டு) தென்படும் அமெலாயிட் என்ற புரத நீர் தூக்கமில்லாமல் போனால் அதிகரித்து அல்சைமர் நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாவு என்று கூறப்படும் மற்றுமொரு தாதுப்பொருள், அல்சைமர் உடன் சம்பந்தப்பட்டது. இவை நம் மூளைப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும் அவற்றின் சுரப்பு சரியான அளவில் இருப்பதற்கும் சரியான தூக்கத்தின் அளவு தேவைப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி மிகவும் சவாலான ஒன்று. இது வரை நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் குழப்பமான முடிவுகளை முன் வைத்திருக்கின்றன. உதாரணமாக ஒரு ஆராய்ச்சியில் அதிக நேரம் அதாவது 9 மணி நேரத்திற்கு அதிகமாக உறங்குபவர்களுக்கு இந்த டிமென்ஷியா நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆராய்ச்சி முடிவின் நம்பகத்தன்மை இது வயதானவர்களை வைத்து நடத்தப்பட்டது என்பதால் சரியானதாக இருக்காது என்று நிராகரிக்கப்படுகிறது.
அட, தூக்கம் இவ்வளவு அவசியம் என்றால் அதை எப்படிப் பெறுவது?
டாக்டர் யாஃபே தூக்க மாத்திரை மற்றும் வேறு பல வழிகளில் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது என்கிறார். ஆனால், இந்த ஆழ்ந்த நிலையில்தான் நம் உடல் தேவையில்லாததை வெளியேற்றியும், தேவைப்பட்டதை உருவாக்கியும் வேலை செய்யும் என்றும் கூறுகிறார்.
டாக்டர் லுட்சே, தூங்குவதற்கு முன் கஃபீன் மற்றும் மதுபானம் குடிக்காமல் இருப்பது, தொலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற கருவிகளைப் படுக்கை அறையில் இருந்து அப்புறப்படுத்துவது, தூங்கும் நேரத்திற்கான அட்டவணை தயாரித்து அதன் படி நடப்பது போன்றவற்றைப் பரிந்துரைக்கிறார். ஆனால், டாக்டர் ம்யூசிக்கின் வார்த்தைகளில் தூக்கம் என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது. மொத்தத்தில் தூங்குமூஞ்சிகளாகவும் இருக்க வேண்டாம், தூங்காத ஆந்தையாகக் கொட்டக்கொட்ட முழித் திருக்கவும் வேண்டாம்.