உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா நோய் தொற்று தடுப்பு விதிகளின் காரணமாக கோவில் வாளாகத்துக்கு உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் முடிந்ததை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்தநிகழ்வின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இந்தநிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இந்த நெரிசலினால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்து இருப்பது பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.