திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாநில தலைவர் கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு தணிக்கை துறை மாநில செயலாளர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பெறும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடி தீர்வு காணவேண்டும் என்றும் இல்லையேல் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கோவிந்தராஜ், குளோத்துங்கன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டக் கிளை நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பிலும், மேலும், ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மத்திய மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.