ஒவ்வொரு பெளர்ணமியின்போதும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது சிறப்பாகப் பாரக்கப்படுகிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வருகின்றனர். திருவண்ணாமலைக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் சித்ரா பெளர்ணமி நாளன்று கிரிவலம் வருவது விஷேசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பெளர்ணமி நாளை (15ம் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. நாளை அதிகாலை 2.33 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பக்தர்களின் உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப் பாதையில் அன்னதானம், குடிநீர் வழங்கவும் மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் குளிப்பதற்காக பம்புசெட் நீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறை சார்பில் பல இடங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆகவே இதுபோன்ற வசதிகளைப் பெற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பக்தர்கள், கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்றவும், மலை மீது ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.