ஒவ்வொரு பெளர்ணமியின்போதும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது சிறப்பாகப் பாரக்கப்படுகிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வருகின்றனர். திருவண்ணாமலைக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் சித்ரா பெளர்ணமி நாளன்று கிரிவலம் வருவது விஷேசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இன்று, அதிகாலை 2.33 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடையும் சித்ரா பெளர்ணமிக்கு முன்னரே மக்கள் பலரும் கிரிவலம் செல்ல ஆரம்பித்துவிட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் கிரிவலம் செல்கின்றனர். அவர்களுக்கு பல இடங்களில் அன்னதானமும், குடிநீரும், மோரும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதைப் பருகியபடியே செல்லும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரோ என்ற கோஷத்தை விண்ணதிரச் செய்கின்றனர். பக்தர்களின் உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கிரிவலத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் சொந்த சொந்த ஊருக்குச் செல்வதற்காகவும் போக்குவரத்துத் துறை சார்பில் பல இடங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்கின்றன.