சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சாயப்பட்டறை உரிமையாளர்கள் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் திறந்துவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருமணிமுத்தாறில் நுரை பொங்கி மலை போல் காட்சியளிக்கிறது. பொதுவாகவே, எப்பொழுது மழை பெய்தாலும் சாயக் கழிவுகளால் ஏற்படும் நுரை அதிகளவில் திருமணிமுத்தாறில் ஆக்கிரமித்துக் கொள்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அருகில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சேலம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் அதிகம் கலக்கப்படுவதால் ஆறு முழுவதும் நுரை குவிந்து காட்சியளிப்பதுடன் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், சாயப்பட்டறைகளில் இருந்து ரசாயன கழிவுகளை திருமணிமுத்தாறில் கலப்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.