திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், திருத்தணி முருகன் கோவிலுடன் இணைந்த 30 உப கோவில்களில் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்கு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முன்னதாக அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து, திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் முன்னிலையில், தக்கார் மேற்பார்வையில் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில், திருக்கோயில் பணியாளர்களால் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி மே 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் நடைப்பெற்றது. இதில், ரூ.1 கோடியே 22 லட்சத்து 83 ஆயிரத்து 57 ரூபாய் பணம், 832 கிராம் தங்கம், மற்றும் 12,224 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் கடந்த 36 நாட்களில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக திருத்தணி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.