கரூரில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று கருணாநிதி வாக்குறுதிகூறி மக்களை ஏமாற்றினார். திமுக ஆட்சியில் எந்தநிலமும், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஆகவே, தந்தை முதல் மகன் வரை திமுக ஆட்சியில் வெறும் பொய் வாக்குறுதிகள் மட்டுமே கூறிவருவதாக ஸ்டாலின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உயிரிழந்தபோது அதிமுக எந்தவித வழக்குகளையும் தொடுக்காமல், பெரிய மனதுடன் செயல்பட்டதால்தான் சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இப்போது ஒரு சமாதி உள்ளது. மேலும், தமிழக போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்தவித பயனுள்ள திட்டமும் இல்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொ.மு.ச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருக்க, வாயில் பேண்டேஜ் ஒட்டப்பட்டு உள்ளதா என்றும் வினா எழுப்பி உள்ளார். அதேபோல, மின்சார தடைக்கும் திமுக ஆட்சிக்கும் தான் நல்ல ராசி உள்ளது. முன்னர் திமுக ஆட்சி கவிழ்ந்தது என்றால் அது மின்தடை தான் காரணம் என்று அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே ஒப்புக்கொண்டார். அதேபோல் இன்றும் மின்தடை ஏற்படுகிறது. அதே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியால் தான் இந்த முறையும் திமுக ஆட்சி கவிழும் என்றார்.