தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் சாதனை விழாவாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாநகராட்சி உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனையை கொண்டாடினர். மாநகராட்சி அலுவகம் அமைந்துள்ள சாலைக்கு வெளியே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த திமுகவினரின் இந்த கொண்டாட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அவசர சிகிச்சைக்காக நோயாளியை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸூக்கு கூட வழிவிடவில்லை. திமுகவினரின் இந்தசெயல் அங்கு கூடியிருந்த மக்களையும், காத்திருந்த வாகன ஓட்டி களையும், முகம் சுளிக்க செய்தது.