மிருதங்கம் என்றால் பாலக்காடு மணி ஐயர் தான் நினைவுக்கு வருவார். மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். பெண்கள் மிருதங்கம் வாசிப்பது அதிசயம் தான். அப்படி ஒரு பெண் தான் அவர். அவருடைய குடும்பம் ஒரு இசைக் குடும்பம். இசைக் கலைஞராக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டு பயிற்சி பெற்று இன்று ஒரு வெற்றிகரமான மிருதங்க இசை கலைஞராக இருக்கிறார் அஸ்வினி சீனிவாசன். இந்த துறையில் பல சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் அஸ்வினியின் கனவாம்.
தனது ஆறாவது வயதில் அறியாத மழலை மொழியில் ‘மிருதங்கம் வாங்கித்தா’ என அஸ்வினி கேட்டதாக மனம் நெகிழ்கிறார் அவரது தாய் ரமா சீனிவாசன்.
அஸ்வினியின் தாயார் வீட்டில் சிறார்களுக்கு பாட்டுச் சொல்லிக் கொடுப்பாராம். அப்போது சிறுமியாக இருந்த அஸ்வினி தன் கையில் கிடைக்கும் டப்பாக்களை கொண்டு பாட்டிற்கு அழகாக ரிதம் வாசிப்பாராம். இதைக்கண்ட அஸ்வினியின் தாய் அஸ்வினிக்கு டோலக் வாங்கி கொடுத்தாராம். ‘இல்லை. எனக்கு இது வேண்டாம் நடுவில் கருப்பாக இருக்கும் மிருதங்கம் தான் எனக்கு வேண்டும்’ என மழலை மொழியில் தன் தாயிடம் கேட்டாராம் அஸ்வினி.
மிருதங்க இசையின் மீது அஸ்வினியின் ஆர்வம் அதிகம் இருப்பதை கண்ட அவரது பெற்றோர் அஸ்வினிக்கு முறையாக மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். அம்மாவின் பாடலுக்கு அழகாக ரிதம் வாசிக்கும் அஸ்வினி தனது ஏழு வயதில் மிருதங்கத்தை சங்கீத கலாநிதி டாக்டர் டி.கே. மூர்த்தியிடம் முறையாக கற்கத் தொடங்கினார்.
சிறுவயது முதலே கலையில் கால் பதித்த அஸ்வினி படிப்பிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். பள்ளி படிக்கும் போதே பல கச்சேரிகளில் பங்கேற்றார் அஸ்வினி. ‘பள்ளி நிர்வாகம் என் திறமைக்கு மதிப்பளித்து மிகவும் உதவியது. என் வருகை பள்ளி பதிவேட்டில் 50 விழுக்காடு தான் இருக்கும்’ என புன்னகைக்கிறார் அஸ்வினி. பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக வலம் வந்த அஸ்வினி சமஸ்கிருத மொழியில் மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
மிருதங்க இசையின் ஆழத்தைக் காண வேண்டும் எனக் கருதும் அஸ்வினி பயிற்சி நேரம் இதுவென்று கருதாது வாசித்துக் கொண்டே இருப்பார். குறைந்தது இரண்டு மணி நேரமாவது வாசிப்பாராம். ‘வீட்டில் அக்கா, தங்கை இருவரும் தோணும் போதெல்லாம் வாசித்துப் பயிற்சி எடுப்பார்கள். எங்கள் வீட்டில் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்’ என மனம் மகிழ்கிறார் அஸ்வினின் தாயார் ரமா சீனிவாசன்.
மேலும் ‘தன் இரு பெண்களையும் ஒரே மேடையில் பார்ப்பது மிக மகிழ்ச்சியை தருகிறது. அவர்களை மற்றவர்கள் பாராட்டும் போது எனக்கு அளவற்ற சந்தோஷத்தை தருகிறது’ என மனம் திறக்கிறார் ரமா சீனிவாசன்.
சிறு வயதிலேயே பல பாராட்டுகளை வாங்கிக் குவிக்கிறார் அஸ்வினி சீனிவாசன். பிஞ்சுக் கைகளில் தொடங்கிய மிருதங்க இசை, 15 வருடங்களாய் பல பரிணாமங்களைக் கடந்து பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கின்றது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு ‘கலைவாணர் மணி’ என அஸ்வினியை அங்கீகரித்துள்ளது. மலேசியாவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி ஆலயத்தில் இருந்து ‘சங்கீத பக்த சிரோமணி’ என்ற விருதை பெற்றார் அஸ்வினி. சுதேசி அமைப்பிடமிருந்து 2017 ‘சக்தி சாதனை’ விருதை பெற்றார் அவர். மேலும் சங்கீத கலாபீடம் அமைப்பிடம் இருந்து ‘லயா கங்கா’ விருதை பெற்றார் அஸ்வினி. 2014ஆம் ஆண்டு பாரதிய வித்யா பவன் அமைப்பிடமிருந்து ‘பவன் கலாச்சார விருதை’ பெற்றார் அவர். 2011ம் ஆண்டு ‘போகோ அமேசிங் கிட்’ (pogo amazing kid) என்ற விருதை பெற்றார் அவர். ரோட்டரி அமைப்பிடம் இருந்து சைல்டு புரோடிஜி (child prodigy award) விருதை பெற்றார் அஸ்வினி. அவர் வாங்கிய விருதுகளைப் பற்றிய செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை பயின்ற அஸ்வினி அலங்கரித்த கச்சேரிகள் 1500க்கும் அதிகம். இதில் அயல்நாட்டு கச்சேரிகளும் அடங்கும். ‘கச்சேரிகளின் அனுபவங்கள் மிக அருமையானது. என் அக்கா (அஞ்சனி) அழகாக வீணை வாசிப்பார். என் அக்காவோடு சேர்ந்து வாசித்த கச்சேரிகள் மிக சுவாரசியமானது. காரணம் நானும் என் அக்காவும் ஒரே சமயத்தில் தான் இசைத் துறையில் அடியெடுத்து வைத்தோம்’ என புன்னகைக்கிறார் அஸ்வினி.
தன் குரு மீது அதிக பயபக்தி கொண்டுள்ளார் அஸ்வினி சீனிவாசன். ‘என் குருவோடு வாசித்த கச்சேரிகள் மறக்க முடியாதது. காரணம் குருவோடு சேர்ந்து வாசித்த கச்சேரிகளில் நான் கற்றது சொல்லில் அடங்காதது. 96 வயதாகும் என் குரு ஒரு லிவ்விங் லெஜன்ட் (living legend)’ எனக் கூறுகிறார் அஸ்வினி.
மேலும் ‘என் குருவினால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். இன்றளவும் நான் என் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டே இருக்கிறேன். நான் என் குருவை போல உலகெங்கும் வாசிக்க வேண்டும்’ என கூறுகிறார் அஸ்வினி.
சென்னையில் ஒரே ஒரு பெண் மிருதங்க வித்வானாக வலம் வருகிறார் அஸ்வினி.’ ஒரு பெண் மிருதங்கம் வாசிக்கிறார் எனும்போது கச்சேரி காண வருபவர்களுக்கு முதலில் ஆச்சரியத்தையேக் கொடுக்கிறது. பெண்களில் பலர் நான் மிருதங்கம் வாசிக்கும் போது தாங்களே ஒரு சாதனை படைத்தது போல் உள்ளது எனக் கூறுகிறார்கள். மேலும் பலர் பாராட்டவும் செய்கிறார்கள். இது எனக்கு மன மகிழ்வை தருகிறது,’ என மனம் மகிழ்கிறார் அஸ்வினி சீனிவாசன்.
மேலும் ‘இசைத் துறையில் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் பெண் மிருதங்க இசை கலைஞர்கள் உள்ளனர். இது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். இசையில் ஆர்வம் கொண்ட பெண்கள் தங்களுக்கு பிடித்தமான இசைக்கருவிகளை கற்க முன்வர வேண்டும்,’ எனக் கூறுகிறார் அஸ்வினி.
மிருதங்கம் மீது அதிக அன்பு கொண்டுள்ளார் அஸ்வினி. நான் ஒரு சிறுமிக்கு மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நான் கச்சேரிகளில் வாசிப்பதில் அதிகமாக கவனம் செலுத்தியதால் என்னால் அச்சிறுமிக்கு கற்று கொடுப்பதை தொடர முடியவில்லை,’ என மனம் உருகுகிறார் அவர்.
மிருதங்கம் அல்லாது ரிதம் பேடு (Rhythm pad) வாசிப்பதிலும் வல்லவராக உள்ளார் அஸ்வினி சீனிவாசன். திருமணம் மற்றும் இசைக் கச்சேரிகளில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு ரிதம் பேடில் மிக அருமையாக வாசிப்பாராம் அஸ்வினி.
‘அக்காவின் வீணை எடுத்து வாசிக்க முயற்சி செய்தது உண்டு. ஆனால் எனக்கு வீணையில் ஈடுபாடு இல்லை. வாசிக்க மட்டுமே முயற்சி எடுப்பேன். ஆனால் எனக்கு வீணை வாசிக்க வரவில்லை’ என புன்முறுவல் செய்கிறார் அஸ்வினி.
நெடுந்தூர பயணம் செய்வது அஸ்வினிக்கு மிகவும் பிடிக்கும். ’என் 12வது வயதில் கார் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நான் என் தந்தையிடம் காரோட்ட சொல்லித்தர கேட்டேன். அவரும் கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார்,’ எனக் கூறுகிறார் அஸ்வினி.
‘என் தாய் தந்தையே எனக்கு பக்கபலம். என் பெற்றோர்கள் என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டதினாலே எனக்கு புகழ் கிடைத்துள்ளது. அவர்களின் உறுதுணையை என்னை ஊக்குவிக்கிறது. மேலும் என் பெற்றோர்கள் நேர்மறை எண்ணங்களை தரும் உந்து சக்தியாகவே திகழ்கின்றனர். என்னால் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பதே எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது’ என தன் அன்பை அழகாக வெளிப்படுத்துகிறார் அஸ்வினி சீனிவாசன்.
தன் குருவையே முன்மாதிரியாக எண்ணும் அஸ்வினி உலக அளவில் தன் பெயரையும், தன் கலையையும் நிலைநாட்ட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளார்.
இந்தியாவின் இளம் வயது மிருதங்க வித்துவானாக வலம் வரும் அஸ்வினியின் புகழ் உலகமெங்கும் பரவும் காலம் நிச்சயம் வரும் என்று நம்பலாம்.
– காயத்ரி