2022ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை ’சிஇஒவோல்ட்’ என்ற இதழ் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த தரவரிசை பட்டியல், உலகளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவை சேர்ந்த ஹார்வேடு மருத்துவ கல்லூரி பெற்றுள்ளது. முதல் 21 இடங்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரிகளே பெற்றுள்ளது. 22ஆவது இடத்தை இந்தியாவை சேர்ந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியும், புனேவில் உள்ள ராணுவ மருத்துவ கல்லூரி 37ஆவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து வேலூர் கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் 60ஆவது இடத்தை மெட்ராஸ் மருத்துவ கல்லூரியும் பெற்றுள்ளது. தமிழகத்தின் 2 மருத்துவ கல்லூரிகள் சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.