இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது இதனால் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இலங்கையின் தற்போதைய சூழல் காரணமாக ஒவ்வொரு நாளும் வாழவழியின்றி அங்கு இருக்கும் தமிழர்கள், ராமேஸ்வரத்துக்கு வருவது தொடர்கதையாக இருக்கிறது. இந்தநிலையில் ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் உரிய விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும், யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தனது இரண்டு குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்துள்ளார். கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண் ரூ.2 லட்ச படகிற்கு கொடுத்து ஆபத்தான முறையில் தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்து இறங்கியாக கூறியுள்ளார். இதையடுத்து அகதிகள் வந்திருக்கும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரைன் போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.