இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தங்களின் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அப்பாவி மக்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழல் காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே உணவு பஞ்சத்தால் தங்களின் குழந்தைகள் உயிரிழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அந்த நாட்டு மக்கள் அகதிகளாக தமிழகம் வருகின்றனர். தவிர, இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி, உயிருக்கு ஆபத்தான சூழலில் பைப்பர் படகுகளில் பயணித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தநிலையில், இதுவரை 42 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, தற்போது 4 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள். இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இது வரை 60 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.