ஆட்சி அதிகாரத்தில் மட்டுமல்ல, அதிகாரம் மிக்க அரசுப் பொறுப்புகளிலும் பெண்கள் அமர்வது பெண்களின் முன்னேற்றத்துக்குச் சாட்சி. தமிழகத்தில் உள்ள 38 மாவடங்களில் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்த வரலாற்று நிகழ்வு பெண்கள் மத்தியில் நம்பிக்கையையும் பெருமித உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் தலைமையிலான நாடுகள் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டுவரும் நிலையில் தமிழகத்தில் இரண்டாம் அலையின் பரவலைக் கருத்தில்கொண்டு 11 மாவட்டங்களில் பெண் ஆட்சியர்களை நியமித்திருப்பது பாராட்டுக்குரியது. இவர்கள் அனைவருமே இளம் பெண்கள் என்பதுடன் இதற்கு முன் இவர்கள் பணியாற்றிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள்.
சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி, தருமபுரி ஆட்சியராக திவ்யதர்ஷிணி, அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போலவே திருவாரூர் மாவட்டத்துக்கு காயத்ரி கிருஷ்ணன், நாமக்கல் மாவட்டத்துக்கு ஸ்ரேயா சிங், தென்காசிக்கு சந்திரகலா, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஆர்த்தி, புதுக்கோட்டைக்கு கவிதா ராமு, நீலகிரிக்கு இன்னொசென்ட் திவ்யா, மயிலாடுதுறைக்கு லலிதா, பெரம்பலூருக்கு வெங்கட பிரியா ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரலாற்றுப் பெருமிதத்தின் பொலிவைக் கூட்டும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு உயர் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் ஆட்சியர் பொறுப்பில் கவிதா ராமுவும் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபனும் இருக்க, நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி, மருத்துவக் கல்லூரி முதல்வராக பூவதி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக லில்லி கிரேஸ், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக கீதா, வருவாய் கோட்டாட்சியராக அபிநயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநராக கலைவாணி, கூட்டுறவு இணைப் பதிவாளராக உமாமகேஸ்வரி ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். ஒரு மாவட்ட நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் முக்கியமான பொறுப்புகளில் பத்துப் பெண்கள் இடம்பெற்றிருப்பது பெண்களால் எவ்வளவு உயரத்தையும் எட்ட முடியும் என்பதை உணர்த்துகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்தால் அதில் பங்கேற்கும் உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பது இன்னொரு வகையில் நல்லதும்கூட. பெண்கள், குழந்தைகள் குறித்த சிக்கல்களை ஒரே அலைவரிசையில் சிந்தித்து, நல்ல மாற்றங்களை உருவாக்கவும் இது வழிவகுக்கும். தமிழக அரசு அதிகாரத்தில் பெண்களின் கை ஓங்கியிருப்பது மாற்றத்துக்கான அடையாளம்!