கோவை அண்ணா சிலை அருகே உள்ள ஜிடி அரங்கில், மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி அமைப்பு சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ‘அமுதம்’ இலவச பசும்பால் வழங்கும் சேவையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பல சமயங்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனக்கு உற்ற துணையாக இருந்து பல நடவடிக்கைகளில் உறுதுணையாக இருந்துள்ளார்’ என தெரிவித்தார். இந்தநிகழ்வில் பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பால் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் பெண்களுக்காக எல்லா நேரமும் இயங்கும் நாப்கின் இயந்திர சேவையையும் நிதி அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, ‘வானதி சீனிவாசன் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையன சிறப்பான சேவையை செய்து வருகிறார். பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு செயல்படுகிறார். பால் கிடைக்காமல் தாய்மார்கள் அவதிபடாமல் இருக்க வானதி சீனிவாசன் இந்ததிட்டத்தை கொண்டு வந்துள்ளார். மக்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்ய எங்களுக்கு பிரதமர் ஊக்கமளிக்கிறார். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் மக்கள் வாக்களித்து அதிக இடங்களில் வெற்றிபெற செய்ய வேண்டும்’ என அவர் கூறினார்.