மனித இனப்பெருக்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகிய ஆண், பெண் இரு பாலரும் சரிநிகர் சமானம். அந்நிய ஆதிக்கத்திற்கு முன்பாக சொத்துரிமை, சுயசிந்தனை, சுய முடிவெடுப்பு, பரஸ்பர மரியாதையுடன் பெண் செயல்பட்டுள்ளாள் என்பதை இடைக்கால தமிழகக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இது அக்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கையை வடிவமைக்கக்கூடிய விதிமுறைகள் செல்வாக்குப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.
தமிழகக் கல்வெட்டுகளில் பெண், ஆண் உறவுகளைக் கொண்டு அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை. குறிப்பாக பெண்கள், தங்கள் கணவர்களை வைத்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் சொத் துடைமை கொண்டவர்களாக சுதந்திரமாகவும், தமக்குரிய உரிமைகளுடனும் வாழ்ந் துள்ளனர். தங்களது சொத்துக்களான பொன், பொருள், நிலங்களைக் கொடையாகக் கொடுத் துள்ளதால் அவர்கள் தற்சார்புத் தன்மையும் அதிகாரமும் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாகத் திகழ்ந்த பெண்கள் தங்களது தான தருமங்களை ஆவணப்படுத்தும் அதிகாரம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
திருமணத்தில் மணமகன் மணமகளுக்குப் பரிசமாகப் பொன்னும் பொருளும் அளித்துள்ளார். திருமணத்தின்போது பெண்ணுக்கு சீதனமாகப் பொன்னும் பொருளும் நிலமும் அவளுடைய தந்தையால் வழங்கப்பட்டுள்ளது. சீதனமாகக் கிடைத்ததை விற்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அப்படிச் செலவழித்துவிட்டவர் அதற்கு ஈடாகத் தன் நிலத்தை அவளுக்கு உரிமையாக்கியுள்ளார். இருப்பினும் ஆண்களின் அதிகாரப்பூர்வமான சொத்தை பெண்கள் தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளனர். கணவன் இறந்த பின் அவன் சொத்தில் மனைவிக்குப் பங்குண்டு. ஆண் பிள்ளைகள் இல்லாத இல்லங்களில் அக்குடும்பத்தினர் வழிவழியாக ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யும் உரிமை அக்குடும்பத்துப் பெண்களுக்கு இருந்துள்ளது.
சோழப் பெருவேந்தர்கள் தாம் வென்ற நாடுகளிலிருந்து பொன்னும் பொருளோடு இளம் பெண்களையும் வீரர்களையும் சிறைப்பிடித்து வருவது மரபு என்றாலும் அப்பெண்கள் தம் சுற்றத்துடன் முழு உரிமையுடன் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. அப்படி வந்த பன்னாட்டு மகளிர் வாழ்ந்த பகுதி ‘வேளம்’ என்று அழைக்கப்பட்டது. வேளங்களில் இருந்து தமக்கெனப் பணிக்கப்பட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இடைக்காலத் தமிழகத்தில் பெண்கள் அரண்மனைப் பணிகள் செய்பவர்களா கவும், அரசு அதிகாரிகளாகவும் கிராம அதிகாரிகளாகவும் பதவியேற்றுச் சிறப்புற்றிருந்தனர்.
இறைவனுக்குச் சேவை செய்யும் தேவரடியார்கள் சொத்துக்களை வாங்க, விற்க, தானமாக வழங்க, திருமணம் செய்துகொள்ள உரிமையுடையவர்கள் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. தேவரடியார்களுக்கு நிலமும், குடியிருப்பு மனையும், பட்டமும் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். செல்வ வளம், தெய்வ பக்தி, அறச்சிந்தனை, அழகும் அறிவும் உடைய தேவரடியார்கள் இசை, நடனம், கூத்து போன்ற கலைகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர். கோயில் களின் சீரமைப்புக்குப் பாடுபட்டவர்களுக்கு பல சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன. மக்கள் சமூகத்தில் அவர்கள் புகழும் பெருமதிப்பும் பெற்றவர்களாக இருந்துள்ளமைக்குப் பல கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. திருமணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்வு வாழ்ந்து கொண்டே தேவரடியாருமாகப் பணி செய்துள்ளனர். ‘பதியிலார்’ என்ற பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ளதைத் திருச்சத்துறை கல்வெட்டு கூறுகிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சக்தி வழிபாடு ஏற்றம் பெற்றுள்ளமையிலிருந்து பெண்களுக்கான சிறப்பிடம் தெரிய வருகிறது. சைவ, வைணவக் கோயில்களில் எழுந்தருளியுள்ள மூலவரின் துணைவியாருக்கென கோயில் வளாகத்துக்குள்ளே ‘திருகாமக்கோட்டம்’ என்னும் பெயரில் தனி சன்னதி அமைப்பது பிரபலமடைந்தது. இதற்கு சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகாமி அம்மன் சன்னதியை சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் மூலவருக்கு நிகராக இறைவி சன்னதியும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்ததை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணலாம். பெண் தெய்வக் குறியீடு மேலோங்கியதால் தேவிகளுக்கென தனிக்கோயில்கள் உருவாகியதை தேவிகாபுரம் அம்மன் கோயில் மூலம் அறியலாம்.
புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி கல்வெட்டுகளில் பெண்கள் இடம்பெறுவது பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு குறைந்துகொண்டே வந்துள்ளது. கோயில்களில் பணிபுரிந்துவந்த பெண்களைத் தவிர பிற பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக அரசிகள் மற்றும் பிராமணப் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது பெண்கள் அனுபவித்து வந்த சுதந்திரமும் சொத்துக்களும் சுருங்கிவிட்டதைச் சுட்டிக் காட்டுகிறது. இதற்கு அந்த நூற்றாண்டில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளும், அதனால் உருவான இராணுவ அடிப்படையிலான சிற்றரசுகளும் உருவானதாதும் முக்கியக் காரணம் ஆகும். அக்காலத்தில் பெண்களின் அடையாளங்களையும் செயல்பாடுகளையும் வரையறுப்பதில் சாஸ்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பெண்களின் முக்கியத்துவம் அவர்களது செயலாற்றலைப் பொறுத்ததாக அமைவதைக் காலந்தோறும் வரலாற்றில் காணலாம். அவர்களது செயல்பாடுகளுக்கு அரசியல், சமயம், பண்பாடு, குடும்பம் ஆகியன முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே, கல்வெட்டுகளை ஆய்வு செய்வதின் மூலம் பெண்கள் நிலை குறித்த தெளிவான சித்திரத்தை வழங்க முடியும்.
-பேராசிரியர் பா.ஷீலா