சுற்றி ஆட்கள் இருந்தாலும் சிலர் எப்போதும் தனிமையாக உணர்வார்கள். இன்னும் சிலர், விரும்பித் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வார்கள். பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலப்பதில் அவர்களுக்கு மனத்தடை இருந்து கொண்டே இருக்கும். அவர்களைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்கப்போகிறோம்.
கேள்வி: தனிமையை விரும்புகிறவர்கள்
(introvert) யார்? அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்?
பதில்: தனிமையை விரும்புகிறவர்களை introvert என்று சொல்வோம். இது பிரச்சினையான நடவடிக்கை கிடையாது. இன்றைக்கு சோஷியல் மீடியா, இன்டர்நெட், கூகுள் போன்றவை இருப்பதனால், நாம் எதற்கெடுத்தாலும் சட்டென்று அவற்றின் துணையைத்தான் தேடுகிறோம். அதனால் எதைப் பற்றியும் நமக்கு உண்மையான, ஆழமான தெளிவு கிடைப்பதில்லை. கிடைக்கிற மேம்போக்கான தகவல்களை வைத்து நாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். Introvert என்பது ஆளுமைத் தன்மையில் ஒருவகை. அதாவது இதுவும் ஒரு பர்சனாலிட்டி கேரக்டர்தான். ஆளுமைத் தன்மையில் மூன்று விதமான பிரிவு இருக்கிறது. Extrovert, Introvert, ambivert என்பார்கள்.
கேள்வி: introvert மனநிலை கொண்டவர்கள் ரொம்ப அறிவாளியாகவோ அல்லது சைக்கோவாகவோ இருப்பார்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அது உண்மையா?
பதில்: இண்ட்ரோவர்ட்களுக்குக் குறைவான சமூகத் தொடர்பே தேவை. எதிலுமே பட்டும்படாமல் இருக்கவே அவரகள் விரும்புவார்கள். இவர்களுக்கு நேர்மாறானவர்கள் எக்ஸ்ட்ரோவர்ட்டுகள். எதிலுமே அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். எப்பொழுதுமே அவர்களை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச கவன ஈர்ப்பு தேவைப்படும். உண்மையில் தனித்து இருக்கும் இண்ட்ரோவர்ட்கள் கூர்மையான கவனிக்கும் திறன் கொண்டவர்கள். எதையுமே ரொம்பப் பொறுமையாகவும் அமைதியாகவும் யோசித்து, தீர ஆராய்ந்து, விசாரித்துச் செய்வார்கள். பெரும்பாலும் இவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். காரணம், அவர்கள் நிறைய யோசிப்பார்கள். ஆழ்ந்த யோசனை அவர்களது அறிவை விசாலப்படுத்தும். எதைச் செய்வதாக இருந்தாலும் அதற்கென நேரம் ஒதுக்கித் திறம்படச் செய்து முடிப்பார்கள்.
ஆனால், சமூகத்துடன் ஒட்டாமல் முற்றாகத் தனித்திருப்பது மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறக்கூடும். மக்களிடம் இயல்பாகப் பழகாமல் கூச்சப்பட்டுக்கொண்டோ தயங்கியபடியோ இருப்பது குறிப்பிட்ட சிலருக்கு இருக்கும். கூச்ச சுபாவத்தில் பல வகை உண்டு. சிருக்குப் பிறரிடம் பேசுவதில் தயக்கம் இருக்கும். சிலர் மேடையில் ஏறி பேசுவதற்குக் கூச்சப்படுவார்கள். இன்னும் சிலருக்கோ மற்றவர்கள் முன்பு சாப்பிடுவதற்குக் கூச்சமாக இருக்கும். இந்தக் கூச்ச சுபாவத்தின் அளவைப் பொறுத்துத்தான் அதன் தீவிரத்தன்மை அமையும். இவர்களுக்கு மக்களுடன் இயல்பாகப் பழகுவதில் சிக்கல் இருக்கும். எப்போதும் ஒருவிதப் பதற்றமும், எதிர்மறைச் சிந்தனையும் இருக்கும். தங்களைப் பற்றி மக்கள் முன்முடிவுடன் இருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று நினைப்பார்கள். இவர்களால் ஒரு சின்ன விஷயத்தைக்கூடச் சரியாகக் கையாள முடியாது. இந்த அணுகுமுறையால் அவர்கள் அனைத்து வேலையையும் கெடுத்துவிடுவார்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள். அதனாலேயே இவர்கள் முடிந்த அளவுக்கு அனைத்திலிருந்தும் விலகியிருக்கப் பார்ப்பார்கள். தாங்கள் இப்படி இருப்பது தவறு என்று அவர்களுக்கும் புரியும். அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கான முயற்சியோ, நடவடிக்கையோ எடுப்பார்கள். இண்ட்ரோவர்ட்களுக்கு இப்படியான தயக்கம் குறைவு. யாருடனும் சேர மாட்டார்களே ஒழிய, வாய்ப்பு கொடுத்தால் சேர்ந்து பணியாற்ற விரும்புவார்கள். இல்லையென்றால் தனிமையைத்தான் விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள்.
கேள்வி : இண்ட்ரோவர்ட்கள் யாருடனும் எளிதில் பேசமாட்டார்களா?
பதில் : இண்ட்ரோவர்ட்கள் யாருடனும் எளிதில் பேச மாட்டார்கள், தனிமையைத்தான் அதிகம் விரும்புவார்கள் என்பது கிடையாது. இது திரைப்படங்கள் மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் முழுக்க, முழுக்கச் சித்தரிக்கப்பட்டது. இண்ட்ரோவர்ட்களுக்கு இது பெரிய உளவியல் சிக்கல் இல்லை. எக்ஸ்ட்ரோவர்கட்கள் எப்படிக் கலகலவென்று மற்றவர்களுடன் கலந்து பேசுகிறார்களோ அதேபோன்று இண்ட்ரோவர்ட்கள் அமைதியுடனும் பக்குவத்துடனும் இருக்கிறார்கள் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இண்ட்ரோவர்ட்கள் பொதுவாக அமைதிவிரும்பிகள். ஆனால், அவர்களுடன் நாம் கருத்து மோதலில் ஈடுபட்டாலோ விவாதத்தில் இறங்கினாலோ கூடுமானவரை அதைத் தவிர்க்கவே நினைப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால்கூட அதை நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். பேசுவதைவிட எழுத்து மூலமாகச் சொல்வதை அவர்கள் விரும்புவார்கள். ரொம்ப உற்சாகமான கலகலப்பான அணுகுமுறையை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
கேள்வி : இண்ட்ரோவர்ட் மனநிலை என்பது ஒரு நோயா அல்லது இண்ட்ரோவர்ட்டா இருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதா? ஹெல்த் மற்றும் மனநிலை அளவில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில் : இண்ட்ரோவர்ட் மனநிலை என்பது வியாதி அல்ல என்பதால் அதற்குச் சிகிச்சையும் தேவையில்லை. இவர்களுக்கும் சமூக ஒதுக்கத்துடன் செயல்படுகிறவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. சோஷியல்ஃபோபியா உள்ளவர்கள் இண்ட்ரோவர்ட்கள் கிடையாது. அவர்களுக்குச் சிறுவயதில் ஏதாவது ஒரு விசயம் அல்லது அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கும். சிறு வயதில் ஏதாவது மோசமாக நடந்திருக்கலாம். யாராவது அவர்களை கேலி செய்திருக்கலாம் அல்லது உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவர்களுடைய வெளித்தோற்றத்தில் சிக்கல் இருக்கலாம். அதை யாராவது கிண்டல் செய்திருக்கலாம். அதனால்கூட அவர்கள் சமூகத்துடன் உறவாடத் தயங்கலாம்.
சோஷியல்ஃபோபியா, சோஷியல் ஆங்சைட்டி இரண்டும் ஒன்றல்ல. ரொம்ப முற்றிய நிலையில்தான் இதற்குச் சிகிச்சை தேவைப்படும். சோஷியல் ஆங்சைட்டி இருக்கிறவர்கள் தினசரி வாழ்க்கையில் பலவற்றையும் போகிற போக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களிடம் ஒரு வேலை கொடுத்து அவர்களை அதைச் செய்யச் சொன்னால் அப்போது அவர்களது பதற்றம் அதிகமாகிவிடும். அந்தப் பதற்றம் தேவையற்றது, எல்லையை மீறுகிறது, அதிகபட்சமாக இருக்கிறது என்றால் அதற்கு ஆரம்பகட்ட சைக்காலஜிக்கல் தெரபி நிறைய இருக்கிறது. இந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு டெவலப் ஆகியிருக்கிறது என்பதைத் தொிந்துகொள்ள வேண்டும். அதைத் தொிந்துகொண்டால் அதற்குத் தகுந்தாற்போல் இதற்கு மருந்து தேவையா அல்லது சைக்காலஜிக்கல் தெரபி மட்டும் போதுமா என்று முடிவு செய்ய முடியும். இந்தச் சிக்கல் எவ்வளவு நாளாக இருக்கிறது, எவ்வளவு வருஷம் இருக்கிறது, பதற்றம் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சோஷியல் ஆங்சைட்டி அதிகரிக்கும்போது பதற்றத்திற்குக் கொடுக்கக்கூடிய மருந்து மட்டும் கொடுக்கப்படும். இதனால், சோஷியல் ஆங்சைட்டியும் சோஷியல் ஃபோபியா போகுமா என்றால் கிடையாது.
முடிந்த அளவுக்கு 6 முதல் 8 மணி நேரம் மன ஆலோசகரை அணுகி இதற்கான தெரபியை எடுத்துக்கொண்டால், அவர்கள் இதில் இருந்து விடுபடலாம். ஆனால், பொறுமை ரொம்ப முக்கியம். இன்றைய காலகட்டத்தில் எல்லா மனநல சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றால் முடியாது. அப்படி தெரபி பண்ணினால் அது ரொம்ப நாளைக்கு நிலைத்து நி்ற்காது. இதில் இருந்து தற்காலிகத் தீர்வுதான் கிடைக்குமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது.