உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மேலும் இதனால் பங்குசந்தைகளும் கடும் சரிவை கண்டு வருகிறது. இந்த வரிசையில், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தின் மீது முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில், நேற்று சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4810க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38480க்கும் விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41672க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.67.00க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.