எப்போதும் பெரிய நட்சத்திர வீராங்கனைகளின் போட்டிக்களமாக இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டம், இந்த ஆண்டு, தர வரிசையில் பின்தங்கியிருந்த வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்றது. தர வரிசையில் 150ஆவது இடத்திலிருந்த, 18 வயது இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, தர வரிசையில் 73ஆவது இடத்திலிருந்த 19 வயது கனடா வீராங்கனை லேலா பெர்னான்டஸை எதிர்கொண்டார். வழக்கமாக நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும், இறுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் வீழ்ச்சி அடைந்ததால், காட்சிகள் அனைத்தும் மாறிப் போனது.சர்வதேச டென்னிஸ் உலகமே இந்த ஆட்டத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் ரடுகானுவும், பெர்னாண்டசும் ஆக்ரோஷமாக மோதினர். அதில், தொடக்க முதலே நல்ல ஷாட்கள் கொடுத்து பந்தை லாவகமாகத் திருப்பி ஆதிக்கம் செலுத்தி வந்தார் ரடுகானு.5-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டு லேசாக ரத்தம் வழிந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடிய போதிலும், அவரது உத்வேகம் குறையவில்லை. முதல் செட்டை 6-4. என்ற கணக்கில் கைப்பற்றிய ரடுகானு 2-வது செட்டில் 1-2 என்று பின்தங்கிய பிறகு மீண்டெழுந்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் எம்மா ரடுகானு 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லேலா பெர்னாண்டசைத் தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் காரணமாக 150 இடத்தில் இருந்து தர வரிசையில் 23 ஆவது இடத்திற்கு அவர் உயர்ந் துள்ளார். 18 வயதாகும் இந்த இளம் வீராங்கனை செய்துள்ள இந்த சாதனையை மற்ற வீராங்கனைகள் யாரும் நிகழ்த்தியது இல்லை என்று அவரைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க ஓபன் டென்னில் போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் நுழையாமல் தகுதி சுற்றில் 3 ஆட்டங்களிலும் நேர் செட்டுகளில் வெற்றி பெற்று அதன் மூலம் பிரதான சுற்றை வந்தடைந்தார்.பின்னர் பிரதான சுற்றில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் 7 ஆட்டங்களிலும் வெற்றியைக் குவித்து வெற்றியைத் தன்வசப்படுத்தினார்.குறிப்பாக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் வரலாற்றில் ஒரு தகுதி நிலை வீராங்கனை மகுடம் சூடியது இதுவே முதல் நிகழ்வாகும். அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் எந்த செட்டையும் இழக்காமல் பட்டத்தை கைப்பற்றியது இவர்தான். 2004ஆம் ஆண்டு ரஷியாவின் மரிய ஷரபோவா தனது 17 வயதில் விம்பிள்டன் டென்னிசில் பட்டத்தை வென்றிருந்தார். அதன் பிறகு இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெயரை ரடுகானு பெற்றுள்ளார்.
தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியாகக் கடந்த ஜூன்-ஜூலையில் நடந்த விம்பிள்டன் போட்டியில் பங்கேற்று 4ஆவது சுற்றில் படுதோல்வி அடைந்தார். இந்தப் படுதோல்வியின் காரணமாக அவர் டென்னிசில் இருந்து விலகுவதாக செய்தி வந்த நிலையில், தற்போது டென்னிஸ் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனது 2ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். 1977ஆம் ஆண்டு இங்கிலாந்து வீராங்கனை விர்ஜினியா வேட் விம்பிள்டன் பட்டத்தை வென்று இருந்தார். 44 ஆண்டுகளாக இங்கிலாந்து வீராங்கனைகள் யாரும் பட்டத்தைக் கைப்பற்றாத போது தற்போது அவர் இந்தப் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
கனடாவில் பிறந்த ரடுகானுவின் அம்மா சீனாவைச் சேர்ந்தவர். அப்பா ருமேனியாவைச் சேர்ந்தவர். அவர் சிறு வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறி வளர்ந்ததால், அந்நாட்டுக்காகக் களம் இறங்கியுள்ளார். அவர் தனது வெற்றி குறித்துப் பேசுகையில் “தாம் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கிராண்ட்ஸ்லாம் வெல்ல வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு நனவாகியுள்ளது. இறுதி சுற்றில் இரு இளம் வீராங்கனை கள் மோதியதன் மூலம் எதிர்காலப் பெண்கள் டென்னிஸ் எவ்வளவு வலிமை யானது என்பதை காட்டியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.