பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்துவரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், பெட்ரோல், டீசலின் விலையும் உயர்ந்தது. தமிழகத்தில், 2021 நவம்பர் மாதம் சதமடித்த பெட்ரோல் டீசல் விலை வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களால் சற்றுக் குறைந்திருந்தது. பின்னர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சதத்தைத் தாண்டி விலை உயர்ந்தது. இன்றும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். இதற்காக, நம் நாட்டில் ஒருபுறம் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் சில மாநிலங்களில் ஆட்டோ, பஸ் போன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டைநாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் பல்வேறு வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிகபட்சம் 1000 ரூபாய் வரை மட்டுமே பெட்ரோலைப் பெற முடியும் என்றும் ஆட்டோக்களுக்கு ரூ.1,500 வரையிலும், கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை பெட்ரோல், டீசலை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அது அறிவித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் இன்னும் சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் இப்படியென்றால், நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இமரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இந்த மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ஆனால், ஷபாஸ் ஷெரீப்பின் புதிய அரசு, இந்த மானியம் வழங்குவதை நிறுத்தி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் என அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்கு போட்டுள்ளது. பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒருதடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த 15 நாட்களுக்குள் விலை மாற்றத்தின் நிலவரம், ஷபாஸ் ஷெரீப் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அமையும் என்கின்றனர்.