சொல் வெல்லும் என்றால் அது சொல்பவர்களைப் பொறுத்து இருக்கிறது. சொல் தாங்கி வரக்கூடிய கருத்தைப் பொறுத்து இருக்கிறது. சொல்லினுடைய பலம், பலவீனங்களைப் பொறுத்து இருக்கிறது. ஒற்றைச் சொல் அல்ல வெல்வது. அது சொற்றொடராகவும் இருக்கலாம். ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையே இருக்கும் மௌனமும் பொருள் தந்துவிடுகிறது. அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் சொல் கண்டிப்பாக வெல்லும்.
உதாரணத்திற்கு பேசுங்கள் என்று என்னிடம் சொன்ன பிறகு நான், ‘ஆ…’ என்று சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். என் பதிலுக்கு முன்பாக வரும் அந்த, ‘ஆ…’ என்ற ஒலி வடிவத்தில் இருக்கும் உணர்வை எந்தப் பொழுதும் யாராலும் எழுதிக் கொடுக்க முடியாது. அந்த ஒலியிலிருந்தே ஒரு மொழி உருவா கிறது. ஒலிக்குறிப்பி லிருந்தே பதில் தொடங்கி விடுகிறது.
கேள்வியும் அப்படித் தான். கேள்வி என்பது, கேள்விக்குறியில் மட்டும் அல்ல, சொற்களின் அமைப்பில் மட்டுமல்ல, கேட்பவரின் புருவச் சுருக்கத்தில் இருக்கலாம், குரலில் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். கேள்வியை வாங்கிக் கொள்பவர்கள் புரியவில்லையே என்று பார்க்கும் ஒரு பார்வையைப் பொறுத்து உங்கள் கேள்வி நீண்டு அகன்று விசாலமாக வரலாம்.
தனிப்பட்ட ஒரு சொல் எதைத் தாங்க முடியும், எதைத் தாங்க முடியாது என்று என்னால் சொல்ல முடியாது. இப்படி இருக்கும்போது ஒரு சொல் வெல்லுமா என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாது. ஏன் என்றால் வெற்றியும் ஒரு சொல்தான். வெல்வதற்கான வாய்ப்புகள் தான் வெற்றிக்கான வழியாக இருக்கின்றன. மௌன மாகவே இருந்துவிடுவோம் என்று சொன்னால் மௌனம் வெல்லுமா என்றுகூட கேட்கலாம். இரண்டு சொற்களின் இடையே வரும் ஒரு மௌனம் பொருள் கொடுத்துவிடுகிறது. அது சொல்லைவிட அதிக பொருளைத் தாங்கி அமைந்துவிடுகிறது. அது வெறும் கனத்தை மட்டும் சுமப்பதில்லை. அது கனத்தைச் சுமக்கும் நேரம்தான் இந்த உடல் மொழி பக்கபலமாக இருக்கிறது.
அந்தரத்தில், ஆகாயத்தில், அத்துவானக் காட்டில், ஒற்றையாக உலவக்கூடிய சொல்லுக்கு ஒரு வலிமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காற்றடித்தால் கடத்திக்கொண்டு போகும் வார்த்தைகளுக்கு எந்த வெற்றியும் இருக்குமா என்று தெரியவில்லை.
ஒரு சொல் சென்றடைவதற்கு இரண்டு காதுகள் வேண்டும். சொற்களுக்கு இலக்கு என்று ஒன்று வேண்டும். அந்த இலக்குகளை நோக்கி அம்புகளாகப் போக முடியாத வார்த்தைகளுக்கு எப்படி வெற்றி இருக்க முடியும்? பேசுவதற்கான குரலும் அது வார்த்தைகளாக வருவதற்கு மொழியும் இருப்பது எவ்வளவு கட்டாயமோ அதைவிட பத்து மடங்கு கட்டாயம் கேட்பதற்கான இரண்டு காதுகளும், புரிந்துகொள்வதற்கான ஒரு மனமும் இருப்பது. அப்போதுதான் வெற்றி அமைவற்கான சாத்தியங்கள் உண்டு.
பல நேரங்களில் சொன்னது, சொன்னதாக நினைத்தது, கேட்டது, கேட்டதாக நினைத்தது என்று இரண்டுக்கும் நடுவில் பொருள் என்கிற வெற்றி வழுக்கிப் போகும் சமயங்கள் எத்தனையோ இருக்கின்றன. முடமாகிப் போன சமயங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஊமையாகிப் போன சமயங்கள் எத்தனையோ இருக்கின்றன.
ஒரு பத்து நிமிடம் நாம் பேசும்போது, எதிரில் இருப்பவர்கள் உள்வாங்கிக்கொள்ளாமல் போகும்போது, அந்தப் பத்து நிமிடப் பேச்சு மட்டும் அல்ல, அந்தப் பேச்சுக்கான காரணமும் தோற்றுவிடுகிறது.
பல சமயங்களில் வாய் அசைக்காமல் வெறும் கண் அசைவிலேயே சொற்கள் போய்விட்டன என்று சொன்னால், சொற்கள் தேவை இல்லாமல், அந்த மௌனம் இன்னும் ஆழமாக, அழுத்தமாகப் பல வெற்றிகளை ஒருவருக்குத் தரும்.
இந்த சொல்லை ஏதோ மனிதர்களுக்கிடையே மட்டும் இருக்கிற ஒரு அம்சமாக எடுத்துக்கொள்கிறோம். வீட்டில் ஒரு பூனையோ, நாயோ வளர்க்கக் கூடிய ஒரு அழகான வாய்ப்பு, வரம் கிடைக்கப் பெற்றிருக்குமேயானால் உங்களுக்குத் தெரியும். சொற்களை மனிதன் வீணாக்குவது போல விலங்குகள் ஒருபோதும் வீணாக்குவதில்லை. எந்த சமயம், சந்தர்ப்பம், தேவை என்று எல்லாம் தெரிந்து, இருக்கக்கூடிய நபர்களையும் பொறுத்துதான் அவற்றின் அந்தப் பேச்சு இருக்கும். அதைப் பேச்சு என்றுதான் நான் சொல்கிறேன். நாய் குரைக்கிறது, பூனை கத்துகிறது என்று இப்படிச் சொல்ல முடியாது. நமக்குக் கைவசம் வார்த்தைகள் இல்லாததால் இப்படி எதையோ ஒன்றைக் கூறிவிடுகிறோம். பூனைகளோடும், நாய்களோடும் பேசும்போது, அல்லது உங்களுக்கு எந்த ஒரு நெருக்கமான விலங்காக இருக்கலாம், அவற்றோடு பேசும்போது, அல்லது செடி கொடிகள் இருந்தால் அவற்றோடு பேசும்போது நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றால் உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்.
என் வீட்டில் இருக்கும் பூனை, நான் எங்காவது சுற்றிவிட்டு வந்து அதன் அருகில் நிற்கும்போது, எங்கே போனாய் என்கிற மாதிரிதான் அதனுடைய கேள்வி இருக்கும். அது ஒரு கேள்வியாகவே இருக்கும். அதன் குரல் ஏறி இறங்கி ஒரு கேள்விக்குறியாக அதன் பாவனை ஆகாயத்தில் தொக்கி நிற்பது போல் எனக்குப் புரியும். மிக நீண்ட பதிலை அது என்னிடம் எதிர்பார்க்கும். நான் பதில் சொல்லவில்லை என்றால் அது என் கூடவே வரும். அதே போல எங்காவது அது சுற்றிவிட்டு வந்து என் முன்னால் உட்காரும்போது, எங்கே சுற்றிவிட்டு வருகிறாய் என்று நான் கேட்டவுடனே, நான் கேட்பது கேள்வி என்று அதற்குத்தெரியும். ஒரு பதிலை நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அதற்குத் தெரியும். மிக நீண்ட பதிலை அது சொல்லும். நான் பொறுமையாக உட்கார வேண்டும் அதன் முன்னால். அந்தப் பதிலில் புள்ளி இருக்கும், கமா இருக்கும். இதெல்லாம் கற்பனை இல்லை. அனுபவத்தில் இருந்து வந்த ஒரு விஷயம்.
அதனால், சொல் வெல்லுமா, சொல்லே வெல்லுமா என்று கேட்கக்கூடிய கேள்வியில்கூட நான் ஓராயிரம் கேள்விகளைக் கொண்டு வந்து சொருகிக்கொள்கிறேன்.
ஒரு சொல்லில் எந்தப் பேதமும் இருப்பதில்லை. அது ஆண், பெண் என்று சொல் வேறுபாடு பார்ப்பதில்லை. மனிதர்கள், ஆண், பெண் அல்லது விலங்குகள் என்று அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் சொற்களைச் சொல்லிவிடுகிறார்கள். சொல்லில் வேறுபாடு இல்லை. சொல்லும் நபர்களில்தான் வேறுபாடு இருக்கிறது.
கேட்கும் நபர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, பூனையாகவோ, நாயாகவோ இருக்கலாம் தவிர, சொல்லைச் சொல்லாக உள்வாங்கினால் இந்தப் பேதங்கள் எதுவும் அதில் வராது. பல நேரங்களில் நாம் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்லை. கேட்டவர்களுக்குத்தான் பதில் சொல்கிறோம். அதனால்தான் கேட்டவர்களின் தன்மையைக் கேள்வியில் சொல்லில் வைத்துக்கொள்கிறோம்.
ஆண் மொழி, பெண் மொழி என்று சொல்லும்போது, அப்படிப் பார்க்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்திக்கொண்டு பார்க்கிறோம்.
மற்றபடி சொல் வெல்லும் என்றால் அது கேட்கிற, கேட்கப்படுகிற மனிதரை, உயிரைப் பொறுத்துதான் இருக்கும். அதனால்தான் சொல் வெல்லும்.
– ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன்