தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அஇஅதிமுக, அமமுக, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பற்றிக் கவலைப்படாமல், அவரது வீட்டு மக்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டுள்ளார்’ என்றார். ஓ.பன்னீர்செல்வமோ, ‘நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளது திமுக. கொரோனா பரவல் முடிவடையாத சூழலில் சொத்துவரி உயர்வு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது’ என்றார்.