செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 27ம் தேதி மாமல்லபுரத்தில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கயிருக்கிறது. இப்போட்டி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான 100 நாள் கவுண்ட்டன் நேற்று தொடங்கியது. 200 நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறைகூட இந்தியாவில் நடத்த வாய்ப்புகிட்டாத நிலையில், தற்போது 2022ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டிருக்கும் போர் காரணமாக 2022ம் ஆண்டுக்கான போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பயனாகத்தான் இந்த முறை செஸ் ஒலிம்பியாட்டை நாம் நடத்த இருக்கிறோம். முன்னதாக, கொரோனா காரணமாக 2021ம் ஆண்டு இணையவழியில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.