பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதற்காக, ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைய உள்ளார். இதனையத்து, பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்க உள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 10 ஆயிரம் காவலர்கள் சென்னை மாநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு 30 நிமிடங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து மாலை சுமார் 5.45 மணி அளவில் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், அவர் வரும் சாலைகள் முழுவதும் நேற்று இரவில் இருந்தே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. முன்னதாக, மோடி வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து, சென்னை விமான நிலையம், பிரதமரின் சாலைமார்க்க பயண வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் காவலர்களும் இணைந்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்துள்ளனர். விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா ஆகியோரும் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்கள். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்தபகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இரவு 7 மணி வரை நடைபெறும் விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக இரவு 7.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடையும் மோடி அங்கிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றடைய உள்ளார்.