வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில், தன் வரலாற்றைப் பதிவுசெய்திருக்கிறார் வடசென்னையைச் சேர்ந்த இளம்பெண் மேயரான பிரியா ராஜன். பல்வேறு மாறுதல்களைச் சந்தித்துள்ள இந்த மாநகராட்சியில், இளம்பெண் மேயரின் வரவும் ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை ‘மாண்புமிகு’ என்கிற அடைமொழியோடு அழைப்பதுபோலவே மேயரும், ‘மாண்புமிகு மேயர்’ என அழைக்கப்படுகிறார்.
மேயர் என்பவர், அந்த நகரின் முதல் குடிமகன். அவர்தான், அந்த நகரின் ஒட்டுமொத்த குரலாக இருக்கக்கூடியவர். மேயருக்காக பிரத்யேக அங்கி மற்றும் செங்கோல் வழங்கப்படும். கூட்டத்தில் அதனுடன்தான் மேயர் பங்கேற்பார். ஆட்சியர், கோட்டாட்சியர்போல மேயருக்கும் `டவாலி’ ஒருவர் உடன் இருப்பார். மாநகராட்சித் திட்டங்களுக்கு மேயரின் ஒப்புதல் மிக முக்கியம். அதேநேரத்தில் ஆணையரின் அதிகாரங்களும், மேயருக்கு இணையாக இருக்கும். இப்படி, பல்வேறு அதிகாரங்களைப் பெற்றிருக்கும் மேயர் பதவியை, ஓர் இளம்பெண் பெற்றிருப்பது மிகப்பெரும் சாதனை.
ஆனால், அதே அதிகாரத்துடன் ஒரு கட்சியின் பின்னால் இருந்து செயல்படுவதுதான் சகித்துக்கொள்ள முடியாதது. இவரது குடும்பம் திமுக பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பதற்காக, இவர் ஒரு திமுக விசுவாசி என்பதற்காக, தான் கட்டிக்காக்கும் பதவியிலிருந்து இறங்கி வர முடியுமா? ஆம், அப்படித்தான் இருக்கிறது இவருடைய பதவி. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட இடங்களுக்கு ஆய்வுக்குச் செல்லும் முதல்வர் முன், ஒரு தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாக வலம்வருகிறார், பிரியா ராஜன்.
தலையாட்டி பொம்மையா?
சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார் முதல்வர். அப்போது, மேயர் பிரியா ராஜன் பின்னால் இருக்கும் கூட்டத்திலிருந்து ஓடிவருகிறார். அதாவது, காணாத தலைவரை காணும்வேளையில், ஆட்டோகிராப் வாங்க ஓடிவரத் துடிக்கும் ஒரு ரசிகரைப்போல இருந்தது, அவர் ஓடிவரும் காட்சி. இன்னும் சொல்லப்போனால், முதல்வருக்கு அருகிலேயே தொடர்ந்து செல்ல தகுதிபெற்ற மேயரான இவர், முதல்வர் அருகே செல்ல முடியாமல் கூட்டத்தில் முண்டியடித்தபடி ஓடிவருகிறார்.
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்கினோம் என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசுதான், பதவிக்கு வந்து அரியணையில் அமரவைத்ததும் பெண்களை முன்னேவிடாமலும், முன்னேறவிடாமலும் தடுத்து நிறுத்தி அழகு பார்க்கிறது. மேயர் என்பது எப்படிப்பட்ட பதவி? அதை, ஒரு கட்சிக்காக உழைக்கும் வகையில் ஆக்கியிருக்கிறது ஆளும் திமுக அரசு.
குழந்தையா, மேயரா?
முதல்வர் முன்பு, முழுமையான தகவல்களை வழங்க வேண்டிய மேயர் பிரியா ராஜன், வெறும் பெயரைப் பதிப்பதற் காக மட்டும் கூட்டத்தோடு கூட்டமாய் வந்துகொண்டிருக்கிறார். இதை எல்லாம் பார்க்கும்போது மேயர் பிரியா ராஜன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஒரு குழந்தையாக, ஒன்றும் தெரியாத அப்பாவியாக அல்லவா இருக்கிறார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்கள் முன் ஒருமுறை மேயரைக் குழந்தை என்று குறிப்பிட்டது, தற்போது இதன்மூலம் நிஜமாகியிருக்கிறது.
பிரியா ராஜனின் மேயர் பதவிக்கான தலைவிதியை திமுக நிர்ணயத்திருக்கிறது. அப்படி இருந்தால், அவரால் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்? ‘அடுத்து வரும் வருடங்களில் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய முயற்சி செய்வேன்’ என்று குரல் கொடுக்கும் பிரியா ராஜன், அதற்கான திட்டங்களை எல்லாம் கட்சியின் தலைமை வைத்திருப்பதாகச் சொல்கிறார். அத்துடன், முதல்வர்தான் அவற்றையெல்லாம் சொல்வதாக அடிக்கடி கூறிவருகிறார். ஆக, இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், ஒரு மேயருக்கான அதிகாரம் எங்கே முடங்கிக் கிடக்கிறது என்று. ஆம், அரசியலுக்கு வரும் பெண்களைச் சுயமாக இயங்கவிடாத ஆணாதிக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மேயர் பிரியா ராஜன் போன்றவர்களே உதாரணம்.
கனிமொழியின் தலையீடு
தேர்தலில் ஜெயித்த தங்கள் வீட்டுப் பெண்களை அடுப்படிக்குள் வைத்துவிட்டு அதிகாரத்தையும் பதவியையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் ஆண்கள் நமக்குப் புதிதல்ல. அது தெரிந்ததால்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிலவற்றைச் சொல்லியிருந்தார். “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர்கள், தங்கள் கணவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கக் கூடாது. இது உங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் அல்ல. அடுத்துவரும் தலைமுறை பெண்களுக்கும் சேர்த்துத்தான். அதனால், உங்கள் தந்தை, கணவர், சகோதரர் என்று யாருக்கும் உங்கள் பதவியை விட்டுத்தரக் கூடாது” என்று தெரிவித்திருந்தார். ஆனால், பல்வேறு நகராட்சிகளிலும் ஆண்களே தங்கள் மனைவிகளுக்குப் பதிலாக வார்டுக்குள் வலம்வருகிறார்கள்.
பல்லாவரம் 13ஆவது வார்டு உறுப்பினர் ரேணுகா தேவி. ஆனால், அவருடைய கணவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், “நான் பரமசிவம். பல்லாவரம் 13ஆவது வார்டு கவுன்சிலர். நம் பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படும். இது குறித்து நம் தொகுதி எம்.எல்.ஏ.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்” என்று சொல்லியிருந்தார். அதைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி. காரணம், அவர்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தது ரேணுகா தேவியை. ஆனால், அவரது கணவர் தன்னை கவுன்சிலர் என்று சொல்லிக்கொள்கிறார்! இது குறித்துச் செய்தியாளர் ஒருவர் ரேணுகா தேவியிடம் கேட்டபோது, “அப்படியா, அது எனக்குத் தெரியாது. இனி இதுபோல் அவர் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இதுகூடப் பரவாயில்லை என்கிற அளவுக்கு இருந்தது தாம்பரம் 24ஆவது வார்டின் நிலை. அந்த வார்டின் கவுன்சிலர் கீதா நாகராஜனுக்கு போன் செய்தால் அவரது கணவர் நாகராஜன்தான் பேசுகிறாராம். தானும் தன் மனைவியும் சேர்ந்துதான் தொகுதி மேற்பார்வை பணிகளைச் செய்வதாகச் சொன்னவர், கடைசிவரை கவுன்சிலரான தன் மனைவியிடம் போனைத் தரவில்லையாம். அவரே பேசிவிட்டு வைத்துவிட்டார். இன்னொரு வார்டிலோ, தன் மனைவிக்கு இந்தப் பகுதி குறித்து எதுவும் தெரியாது, அதனால் அரசியலில் தனக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளதால் மனைவிக்கு வழிகாட்டுகிறேன் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். சில பெண் கவுன்சிலர்கள், தங்களுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும் தங்கள் வீட்டு ஆண்களிடம் கற்றுக்கொண்டு அதன் பிறகு தனித்துச் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது பெண்களுக்குப் பெயரளவுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகத்தான் இவை இருக்கின்றன. இது எந்தவிதத்திலும் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுக்காது. ‘தந்தை பெரியார் வழியில் வந்த நாங்கள், சமூக நீதிக்காக குரல் கொடுக்கிறோம்’ என்று சொல்லும் திமுக அரசு, பெண்கள் வகிக்கும் பதவிகளுக்கு அதைச் செயல்படுத்தாதது ஏனோ?
lll