இன்றைய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்க்கொள்கிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் முறையே கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை கண்டு தத்தளித்து வருகிறது. பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பணிந்தது. அதன் பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளை அடுத்தடுத்து தேற்கடித்துள்ளது. இந்தநிலையில், வலுவான நிலையில் இருக்கும் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை தன்வசப்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளது.