இலங்கையில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக அந்த நாட்டுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று மாலை சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் அடங்கிய கப்பல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு இந்த உதவியை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானமாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை வழியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கும் இந்த தீர்மானத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்த கப்பலில் சுமார் ரூ.80 கோடி மதிப்பில் அத்தியாவசிய பொருட்களான பால் பவுடர், அரிசி மற்றும் மருந்து பொருட்களை இலங்கைக்கு இன்று முற்கட்டமாக தமிழக அரசு அனுப்பியது. இதனைத்தொடர்ந்து இன்னும் மீதி பாதி உதவிகளை தமிழக அரசு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.