நாடு முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட நடிகர் விவேக்கிற்கு, ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால், மாரடைப்பு காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி காலமானார். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவேக், தானும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி (கடந்த 17ம் தேதி) அவரின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் அவர் விட்டுச் சென்ற 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை தொடரும் வகையில் விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை, அவரது பி.ஏவும் நடிகருமான செல்முருகன் அன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். நடிகர் விவேக்கின் இந்த கனவுப் பயணத்தை திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் தற்போது கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விவேக் பெயரை சென்னையில் ஒரு தெருவுக்கு சூட்டவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தி.மு.க. தலைமை நிலையப் பொறுப்பாளரும், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான பூச்சி முருகன் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முதல்வரும் ‘உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம்’ என்றதுடன், அதற்கான கடிதத்தையும் தயார் செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறாராம்.