காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதை தொடர்ந்து திருட்டுப்போன வாகனங்களை கண்டுபிடிக்க மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவலர்கள் மணிமங்கலம் மற்றும் படப்பை பகுதிகளில் திருடுபோன இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன்(24), பார்த்திபன்(21), ஹரிஷ்(எ)சாமி(19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒரத்தூர் சாலை செரப்பனஞ்சேரி, கூடுவாஞ்சேரி, குபேரன் நகர், ஊரப்பாக்கம், மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் திருடிய சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் தனிப்படை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவர் மீது ஏற்கனவே மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர்கள் திருடிய இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பல்சர் வகை இருசக்கர வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.