இன்றைய நவநாகரிக வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மொபைல் போன் மாறிவிட்டது . எங்கு வேண்டுமானாலும் மொபைல் போன்கள் பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு ஆண் , பெண் வித்தியாசமின்றி அனைவரும் வந்துவிட்டார்கள் .
கழிவறை தொடங்கி சாலையில் நடக்கும்போது, பயணிக்கும் போது என சதா காலமும் மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர் பலர் . சென்னை போன்ற பெரு நகரங்களில், சிக்னலுக்கு காத்திருக்கும் நேரத்தைக்கூட வீணாக்க விரும்பாத பலர் வாட்சப்பில் உரையாடுவது, வீடியோ கால் செய்வது, என படுபிசியாக இருக்கிறார்கள் .
இவர்களது செயல்பாடு பல நேரங்களில் வேடிக்கையாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. ஹெல்மெட் போடுவது பலருக்கு தலை பாதுகாப்புக்கு என்ற நிலை மாறி, மொபைல் போன் ஸ்டாண்டாக மாறி விட்டது. சாலைகளில் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை பலர் உணர்வதில்லை. மொபைல் போன் பயன்படுத்துபவர் மட்டுமல்லாது மற்றவரின் உயிருக்கும் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறோம் என்ற குறைந்தபட்ச உணர்வு இருந்தாலே பல விபத்துகளை தவிர்க்க முடியும் .
நமது நாட்டில் ஒருமணி நேரத்தில் 53 சாலை விபத்துகளும்,17 உயிரிழப்புகளும் நிகழ்கிறது என்ற அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. 2018 ம் ஆண்டு 1.5 லட்சம் உயிர்ப்புகள் சாலை விபத்துகளால் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்மை விழிப்படையச் செய்ய வேண்டாமா ? இதில் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியதால் 2.4% உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது கூடுதல் அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.