ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 48வது லா ரோடா செஸ் போட்டியில், 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சத்வானி, பகத் என 4 பேர் பங்கேற்றனர். சென்னையைச் சேர்ந்த குகேஷ், கடைசி சுற்றில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் தோல்வியின்றி 7 வெற்றிகளையும், 2 டிராக்களையும் பதிவு செய்தார் குகேஷ். 9வது, கடைசி சுற்றில் 15 வயதான குகேஷ், 49 வயதான இஸ்ரேலின் விக்டரை சந்தித்தார். இதில் வெள்ளைநிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நடப்பாண்டில் குகேஷுக்கு இது முதல் ஓபன் பட்டமாகும். போட்டியில் ஹெய்க் எம்.மார்டிரோசியான் 7.5 புள்ளிகளுடன் 2வது இடமும், மற்றொரு தமிழக போட்டியாளர் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர். பிரக்ஞானந்தாவும் இப்போட்டியின் எந்த சுற்றிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்றாலும், அவர் 4 சுற்றுகளை டிரா செய்ததால் சற்று பின்னடைவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.