ராணுவத்தில் ஆண், பெண் பேதமா?
கமாண்டர் பிரசன்னா
கமாண்டர் பிரசன்னா எடயிலியம். ஓய்வுபெற்ற கப்பற்படை அதிகாரி. ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற இலக்கோடு பயணித்தவர். பணி முடித்து எல்லோரும் ஓய்வு எடுத்தபோது, கப்பற்படையில் பெண் அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து போராடி வென்றவர்.
‘போராட்டம் என் பிறவிக் குணம்’ என்கிறார் பிரசன்னா.
பிரசன்னா கேரளா காசர்கோடு மாவட்டம் கன்ஹான்காட் என்ற ஊரில் பிறந்தவர். அவருடைய தந்தை அவருக்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். பள்ளிக் காலத்தில் பிரசன்னா தேசிய மாணவர் படையில் இருந்தார். ஊரில் நடந்த சுதந்திர தினப் பேரணிகளில் அவர் கலந்துகொண்டு பரிசுகளை வென்றார். கல்லூரிக் காலத்திலும் அவர் தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டார்.
ஆனால் அவருக்குக் கப்பற்படையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
‘தேசிய மாணவர் படையில் இருந்தபோது, கல்லூரியிலிருந்து நாங்கள் கொச்சி கப்பற்படைத் தளத்திற்குச் சுற்றுலா சென்றோம். அங்கு இருந்த பிரம்மாண்டம், ஒழுக்கம் என்னைக் கவர்ந்தன. கடற்பயணம், கப்பல் கட்டுதலில் எனக்கு ஆர்வம் மிகுந்தது. தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று அப்போதுதான் உறுதி பூண்டேன்’ என்கிறார் பிரசன்னா.
ராணுவத்தில் இருந்த ஒழுக்கமும், பெண்கள் மீதான மதிப்பும் பிரசன்னாவை மிகவும் ஈர்த்தன.
’தங்கக் கோடுகள் கொண்ட வெள்ளை உடை எனக்குப் பிடித்தது. அதுவே என்னைக் கப்பற்படையின்பால் ஈர்த்தது’ என்று புன்னகைக்கிறார் பிரசன்னா.
1992 முதல்தான் இந்தியக் கப்பற்படையில் பெண்களை அதிகாரிகளாகச் சேர்க்கத் தொடங்கினார்கள். பிரசன்னா 1994இல் கப்பற்படை அதிகாரியாகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் விண்ணப்பித்தால் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி, தகுதி இருந்தால் பணியில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் பணியில் சேர்வதற்கான பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருக்கும். தேசிய மாணவர் படையில் இருந்த அனுபவமும் உறுதியும் பிரசன்னாவுக்கு உதவிகரமாக இருந்தன.
‘நல்ல ஊதியம், மதிப்பும் இருந்ததால் வீட்டில் என்னை அனுமதித்தார்கள். நான் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பெருமிதம் கொள்கிறார் பிரசன்னா.
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் வீராங்கனையுமாக பிரசன்னா இருந்ததால் அவருக்குள் வெற்றிக்கான தாகம் இயல்பாகவே இருந்தது.
பணிக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டவுடன் அவர் முதன்முதலாக அரக் கோணத்தில் இருந்த ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் நியமிக்கப்பட்டார். அந்தமானில் ஐஎன்எஸ் உத்க்ரோஷ், விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் தேகா தளங்களில் அவர் பணியாற்றினார். 2007இல் பெங்களூருவில் ஏரோ இந்தியா குழுவில் அவர் பணியாற்றினார்.
விமானக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த பிரசன்னா பல சவால்களைச் சந்தித்திருக்கிறார். சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில், அந்த நாட்டுக் கப்பற்படை கப்பலுக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார்.
’அதைப் பார்க்கும்போது எனக்குப் பெரிய குறையாகவும், கவலையாகவும் இருந்தது. நம் நாட்டில் அதிகாரிகளை ஆண் அதிகாரிகள், பெண் அதிகாரிகள் என்று பிரித்துப் பார்க்காதீர்கள் என்று எப்போதும் நான் கேட்டுக்கொள்வேன்’ என்று கூறுகிறார் அவர்.
ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கும் முழு பணிக்காலமும் ஓய்வூதியமும் உண்டு. ஆனால் கப்பற்படையில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு 14 ஆண்டு காலப் பணி முடிந்ததும் ஓய்வூதியம் இல்லை. அவர்கள் வேலையற்றவர்களாய் ஆக வேண்டிய அவலம் இருந்தது. 2008இல் ஓய்வு பெற்ற பிரசன்னா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
‘கப்பற்படையிலிருந்து ஓய்வு பெறும் பெண் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் போன்ற உரிமைகள் இல்லை என்பது மிகுந்த துயரம் தந்தது. இதனால் இளம் பெண்கள் இந்தப் பணிக்கு வரத் தயங்கினார்கள்’ என்கிறார் பிரசன்னா.
தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள் சிலருடன் அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசு இதற்கான நிரந்தர ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தனக்கும் தன்னைப் போன்ற அதிகாரிகளுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறுகிறார் பிரசன்னா. இதன் மூலம் அவருக்கும் அவரைப் போல ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாபெரும் வெற்றி என்று கூறுகிறார் பிரசன்னா.
‘விடாமுயற்சியை என் பெற்றோர் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டினார்கள். என் உறுதி குலைக்க முடியாதது என்று என் ஆசிரியர்கள் இப்போதும் கூறுகிறார்கள்’ என்கிறார் பிரசன்னா. அவருடைய சட்டப் போராட்டத்தின்போது அவருடைய கணவரும் குழந்தையும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள் என்று சொல்கிறார் அவர். சின்னப் பெண் குழந்தையைக் கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் பார்த்துக்கொண்டார்களாம்.
13 வயதான தன் மகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் பிரசன்னாவின் விருப்பம்.
’பெண்களுக்கு இது மிக உயர்ந்த ஒரு தொழில். என் மகள் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறாள். ராணுவத்தில் சேர்ந்தும் அவர் மருத்துவராகப் பணியாற்றலாம் என்று அறிவுரை கூறுகிறேன்’ என்று அவர் சொல்கிறார்.
’ராணுவத்தில் இருந்தபோது உடன் பணியாற்றியவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தோம். சுக, துக்கங்களில் பங்கு கொண்டாம். இப்போதும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அது போன்ற பந்தத்தை அந்தப் பணி தந்தது’ என்று உணர்ச்சியில் மூழ்குகிறார் பிரசன்னா.
கணவர் பாலசந்தரை திருமண இணையதளத்தில் பிரசன்னா சந்தித்தார். பொறியியல் படித்த பாலசந்தர் பிறகு பயிற்சி மற்றும் ஆர்வம் காரணமாக டென்னிஸ் பயிற்சியாளராக மாறினார். பெங்களூருவில் அவர் ஒரு முன்னணி டென்னிஸ் பயிற்சியாளராக இருக்கிறார்.
’எனக்கு டென்னிஸ் பிடிக்கும். கணவரின் கடும் உழைப்பிற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்’ என்கிறார் பிரசன்னா.
ஏதாவது ஒரு சமயத்தில் பிரசன்னா கப்பற்படை பணியை விட்டுவிடலாம் என்று நினைத்தாரா என்று கேட்டால் பொட்டில் அடித்தாற்போல அவர் கூறுகிறார்: ‘இல்லவே இல்லை. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் நான் இந்தப் பணியைத்தான் செய்ய விரும்புவேன்.’