தேனி மாவட்டம் கூடலூரில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கனடாவில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் பாண்டியராஜன் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் கார்த்திக் 35 வயதாகிறது. கார்த்திக் கனடாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதம் முன்பு தான் சொந்த ஊருக்கு வந்தார். கூடலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கூடலூர், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் நிதிஷ்குமார் (24). மின்வாரிய ஊழியர். நேற்று மாலை கார்த்திக், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் கூடலூரில் இருந்து மோட்டாா் சைக்கிளில் கம்பத்திற்கு சென்றுள்ளார்கள். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். கூடலூரில் அருகே அப்பாச்சி பண்ணை அருகே சென்றபோது, நிலை தடுமாறி எதிரே வந்த சரக்கு வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதி்ல் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். நிதிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி வழக்குப்பதிந்து சரக்கு வாகனத்தை டிரைவரான நாகபட்டினம் கீவலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (34) என்பவரை கைது செய்தனர்.